துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய சிறுவர்களின் சாட்சிகளை ஒளிப்பதிவு செய்யும் ஒன்பது அலகுகளை மாகாண மட்டத்தில் நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கல்வி அமைச்சரால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வகையில் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய பிள்ளைகளால் வழங்கப்படும் குறித்த சம்பவத்திற்குரிய சாட்சிகள் மிகவும் முக்கியமானவையாகும். எனினும், அவ்வாறு பாதிக்கப்பட்ட பிள்ளையொருவர், நீதிமன்றத்தில் திறந்த அரங்கில் சாட்சி வழங்கும்போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது.
இதனால், குறித்த சாட்சிகளை, ஒளிப்பதிவு செய்து பெற்றுக்கொண்டு சமர்ப்பிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் 1999 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க சாட்சியங்கள் சட்டத்தின் மூலம் இலங்கையின் நீதித்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, 2001 ஆம் ஆண்டு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில், காணொளிப்பதிவு செய்யும் அலகு ஒன்றைத் ஸ்தாபித்து சாட்சிகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது கொழும்பில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றது.
குறித்த வசதிகளை மாகாண மட்டத்தில் ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஒன்பது மாகாணங்களை உள்ளடக்கியதாக வைத்தியசாலைகள் சார்ந்த சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் ஒன்பது அலகுகளை நிறுவுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.