இலங்கைப் பெண்களை வலுவூட்ட அமெரிக்கா நிதியுதவி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, July 14, 2021

இலங்கைப் பெண்களை வலுவூட்ட அமெரிக்கா நிதியுதவி!

 


சிறு வர்த்தகங்களுக்கு உதவியளிப்பதற்கும் இலங்கை பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கும் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றுப்பரவல் ஏற்படுத்திய பொருளாதார சவால்களை சமாளிப்பதற்கு, இலங்கையிலுள்ள சிறு வர்த்தகங்கள் முயலும் இவ்வேளையில் அவற்றுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவியளித்து வருவதாக, குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இதற்கமைய, ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனமானது, உள்ளூர் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் துறையை முன்னேற்றுவதற்கும், தனியார் துறை முதலீட்டை வலுப்படுத்துவதற்கும், பெண் தொழில் முனைவோருக்கும் உதவியளிப்பதற்கும் இலங்கையில் டீஎவ்ஸிஸி வங்கிக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கியுள்ளது.


இக்கடனின் ஒரு பகுதி, இலங்கை பெண்களுக்குச் சொந்தமான அல்லது அவர்களது தலைமையிலான சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு வழங்கப்படவுள்ளன. இது குறித்து இலங்கை, மாலைதீவுக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவிக்கையில், “பொருளாதார ரீதியாக வலிமையடைந்த பெண்கள் தங்களை மேம்படுத்துவதோடு, குடும்பங்கள், சமூகங்கள், நாடுகளையும் மாற்றுகிறார்கள். சமூகங்கள் முன்னேற்றமடைய வேண்டுமாயின், வளங்கள் மற்றும் வாய்ப்புகளுக்கான அணுகல்கள் பெண்களுக்கு இருத்தல் அவசியம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.