கங்கை நதியில் குழந்தை ஒன்று அழகான மரபெட்டிக்குள் இருந்த படி மிதந்து வந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாவட்டம் காசிப்பூர் பகுதியில் இருக்கும் ஆற்றங்கரையோரம் மரப்பெட்டி ஒன்று மிதந்து வந்துள்ளது. ஆற்றங்கரையோரம் உள்ளூர் படகோட்டி குல்லு சவுதாரி என்பவர் இந்த மரப்பெட்டியை பார்த்துள்ளார்.
அப்போது அந்த பெட்டியின் உள்ளே குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்கவே, உடனே அந்த மரப்பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அப்போது அந்த பெட்டியின் உள்ளே சிவப்பு நிற பட்டுத் துணியில் குழந்தை சுற்றி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.காளிதேவியின் புகைப்படம் அந்த மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த மரப்பெட்டியில் குழந்தையின் பிறப்பு சான்றிதழும் இருந்துள்ளது. இதையடுத்து, அந்தப்படகுக்காரர் குழந்தையை தானே வளர்க்க விரும்பி குழந்தையை வீட்டுக்கு எடுத்துச்சென்றுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து உள்ளூர் மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, குழந்தையை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட பொலிசார் காப்பகத்தில் குழந்தையை சேர்த்தனர்.குழந்தையின் பெயர் கங்கா என பிறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தை தண்ணீரில் தவறி விழுந்ததாக தெரியவில்லை. முழுவதுமாக தயார் நிலையில் வைத்து அனுப்பியுள்ளனர்.
அந்த மரப்பெட்டியை புதிதாக வாங்கியுள்ளனர். குழந்தையின் உடல்நலனை பரிசோதித்து பார்த்ததில், ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.
மேலும், குழந்தை மிதந்து வந்த மரப்பெட்டிக்குள் குழந்தை பிறந்த குறிப்புகள், ஜாதகம், காளி தேவியின் படம் மற்றும் அக்குழந்தை கங்கைமகள் என்று குறிக்கும் வாசகமும் இடம் பெற்றுள்ளது.
கங்கையின் மகளை வளர்ப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் உத்தரப்பிரதேச மாநில அரசு செய்யும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதுடன், படகோட்டியின் மனிதாபிமான செயலையும் பாராட்டியுள்ளார்.