கணவன் மீது பாலியல் புகார் செய்த யாழ் இளம்பெண் திடீர் பல்டி: கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, December 8, 2020

கணவன் மீது பாலியல் புகார் செய்த யாழ் இளம்பெண் திடீர் பல்டி: கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!


 பொய்யான முறைப்பாடு வழங்கியதுடன், முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் பக்கச் சார்பாக நடந்து கொண்டார்கள் என குற்றம்சாட்டிய பெண், நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்றபோது தனது முறைப்பாட்டை மீளப் பெறுவதாக நீதிமன்றில் கூறியதையடுத்து குறித்த பெண்ணைக் கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பருத்தித்துறை நீதிமன்றம் இந்த உத்தரவை இட்டது.

முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் தன்னைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும் தாம் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைக் காட்டி பணம் கேட்டு துன்புறுத்துகிறார் எனவும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், தனது முறைப்பாட்டை பொலிஸார் பக்கச்சார்பாக விசாரணை செய்வதாக தனக்கிருந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அந்தப் பெண் காங்கேசன்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியிடம் முறையிட்டார்.

இதனையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் உத்தரவில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் முறைப்பாட்டு பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் பரிசோதகர், உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இடமாற்றப்பட்டு அவர்களுக்கு ஒழுக்காற்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

அதன் பின்னர் குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணை பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வந்தது. குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முறைப்பாட்டாளரான குறித்த பெண் நீதிமன்றில் தன் மீது பாலியல் தொல்லை மேற்கொள்ளப்படவில்லை என்றும் தான் தற்போது குறித்த முச்சக்கர வண்டி சாரதியுடன் ஒற்றுமையாக வாழ்வதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், பாலியல் தொல்லை, பாலியல் ரீதியான ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தியமை, பொலிஸார் பக்கச்சார்பாக நடந்தமை, போன்ற பொய்யான முறைப்பாடுகளை செய்தமைக்காக அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றின் நீதிவானால் நெல்லியடி பொலிஸாருக்கு கட்டளை இடப்பட்டது.