இலங்கையில் வெறும் 5 மரணங்கள் மாத்திரமே கொரோனா தொற்றினால் ஏற்பட்டவை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று கூறியுள்ளார். ஏனைய 41 மரணங்களும் நாட்பட்ட நோய்களால் நிகழ்ந்தன என்றார்.
இதை சுகாதார அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் இராணுவ தளபதி தெரிவித்தார்.
வீடுகளில் கொரோனா தொற்றாளர்கள் உயிரிழப்பது குறித்து இன்று கருத்து தெரிவித்த இராணுவத்தளபதி-
நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஊரடங்கு உத்தரவு அல்லது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், மருத்துவ சிகிச்சை தேவைப்படும் போது வீடுகளிற்குள் தங்கியிருக்காமல் சிகிச்சை பெற செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இலங்கையில் ஒரு சிறந்த சுகாதார சேவை உள்ளது, யாரும் மறைக்கவோ அல்லது மருத்துவ சிகிச்சை பெறுவதைத் தவிர்க்கவோ கூடாது என்றும் அவர் கூறினார்.
“அவசர மருத்துவ தேவைகள் தேவைப்படுபவர்கள் முடக்க உத்தரவு இருக்கும்போது கூட நோயாளர் காவு வண்டியில் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய ஒரு பொறிமுறையை நாங்கள் நிறுவியுள்ளோம். வைரஸ் பாதித்த அனைவருமே இறந்துவிட மாட்டார்கள் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும். இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே உயிரிழந்துள்ளனர். அதாவது கொரோனா காரணமாக 0.2 சதவீதமானவர்கள் மட்டுமே இறந்தனர், ”என்று தளபதி கூறினார்.