நாய் பண்ணையில் கொலை செய்து புதைக்கப்பட்ட இளம்பெண்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 21, 2020

நாய் பண்ணையில் கொலை செய்து புதைக்கப்பட்ட இளம்பெண்!

 


கும்மிடிப்பூண்டி அருகே நாய் பண்ணையில் கொலை செய்து புதைக்கப்பட்ட இளம்பெண் உடலை, தாசில்தார் முன்னிலையில் போலீசார் தோண்டி எடுத்து விசாரித்து வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் பிரியங்கா (35). இவர், தனது கணவர் சீனிவாசனை பிரிந்து திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அடுத்த வாணியமல்லி கிராமத்தில் சென்னை மாதவரத்தை சேர்ந்த காட்வின் டோமினிக் என்ற காடிபாய் (40) என்பவருடன் வசித்து வந்தார். மேலும் அவர் நடத்தி வந்த நாய் பண்ணையையும் அவர் பராமரித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தங்கை பிரியங்காவை காணவில்லை என செகந்திராபாத்தில் வசித்து வரும் அவரது அண்ணன் விக்ரம் (45) என்பவர் பாதிரிவேடு போலீசில் ஆன்லைனில் புகார் ஒன்றை பதிவு செய்திருந்தார்.

இது குறித்து பாதிரிவேடு போலீசார் இளம்பெண் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து மாயமான அவரை தேடி வந்தனர்.

இது தொடர்பாக வாணியமல்லி கிராமத்தில் உள்ள நாய் பண்ணைக்கு நேற்று போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அதில் இளம்பெண் பிரியங்கா கொலை செய்யப்பட்டு நாய் பண்ணையில் புதைக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து தாசில்தார் கதிர்வேல், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நாய் பண்ணையில் புதைக்கப்பட்ட பிரியங்காவின் உடல் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுக்கப்பட்டது. அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

இது தவிர அந்த நாய் பண்ணை அருகே தைலமர தோப்பில் உள்ள ஒரு தரைகிணற்றில் 2 கருப்பு பைகள் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அந்த பைகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் 12 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் சுமார் 10 கிலோ எடை கொண்ட போதை பவுடர் போன்ற ஒரு பொருள் இருப்பது தெரிய வந்தது.

அது போதை பொருள் தானா? அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளா? என காஞ்சீபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேரில் வந்து அந்த பொட்டலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆய்வுக்கு பிறகே மர்ம பொருளின் தன்மை குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவங்கள் குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் கொலைக்கும் கிணற்றில் கிடந்த மர்ம பொருட்களுக்கும் தொடர்பு உண்டா? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் நாய் பண்ணையின் உரிமையாளர் காட்வின் டோமினிக் எங்கு சென்றார்?. அவரை தவிர இளம்பெண் பிரியங்காவுடன் தொடர்பில் இருந்த மேலும் 3 நபர்கள் யார்?. கொலைக்கான காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்