காணி விவகாரத்தில் பொதுமக்களின் பக்கமுள்ள நியாயத்திற்கே முதலிடம் வழங்கப்படும் என நீர்பாசன துறை அமைச்சு மற்றும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்தோடு, வடக்கு கிழக்கு காணி பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்துவோம் எனவும் அவர் கூறினார்.
நீர்பாசன துறை அமைச்சு மற்றும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பின்னர் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரச காணி அபகரிப்பும் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்துள்ளது. அவற்றை நிறுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரச காணிகளை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அதேபோல் பொதுமக்களின் காணிகளை சூறையாடும் நிலைமையும் இருந்தது.
தெற்கில் அது குறித்த பல முறைப்பாடுகள் எனக்கு கிடைக்கப்பெற்றது. எனவே இப்போது நாம் புதிதாக சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது.
எனினும் இந்த விடயத்தில் மக்களின் பக்கம் உள்ள நியாயத்தை முதலில் கருத்திற்கொண்டு செயற்படவே அரசாங்கம் விரும்புகின்றது.
இதன்போது விவசாய பூமிகளை பாதுகாக்க வேண்டும், அதேபோல் நவீன தொழில்நுட்ப திட்டங்களுடனும் நாம் பணியாற்றியாக வேண்டும். பிரச்சினைகளுக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கும்
அணைத்து பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும். காணி விடயத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் காரணிகள் என்ன என்பதை விடவும் மக்களின் காணிகள் குறித்த பிரச்சினைகள் இருப்பின் அவற்றை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்