சிரியாவின் இராணுவ சோதனைச் சாவடிகள் மீது அமெரிக்காவின் இரு ஹெலிகொப்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் இருவர் காயமடைந்தனர் என்று அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகிழக்கு சிரியாவில், குர்திஷ் நகரமான கமிஷ்லிக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இராணுவ அமைப்புகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் அமெரிக்கா ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதை அடுத்து எல்லைக்குள் நுழைவதை சோதனைச் சாவடியில் உள்ள இராணுவ வீரர்கள் தடுத்தனர்.
இதன்போது அமெரிக்க ரோந்து உறுப்பினர்கள் பல துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்ததாகவும் சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னர் இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் சோதனைச் சாவடியில் இராணுவ வீரர்களைத் தாக்கியதாகவும் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் கமிஷ்லி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வடகிழக்கு சிரியா முக்கியமாக குர்திஷ் போராளிகளால் முன்னெடுக்கப்படும் அமெரிக்க ஆதரவுடைய சிரியாவின் ஜனநாயக படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆனால் சிரிய இராணுவப் படைகள் குர்திஷ் குழுக்களுடனான ஒப்பந்தங்களின் கீழ் சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது