கொரொனா வைரஸுக்கு எதிராக ரஷ்யா உருவாக்கியுள்ள உலகின் முதலாவது தடுப்பூசியின் சோதனை விபரங்களை ஆய்வு செய்ய ஆர்வமாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய ஊடக அலுவலகம் கூறியுள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் என பல நாடுகளும் களமிறங்கியுள்ளன.
அந்த வகையில் ஏறத்தாழ 165 தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியை தாங்கள் உருவாக்கியுள்ளதாக ரஷ்யா நேற்று முன்தினம் அறிவித்தது.
அந்த நாட்டின் இராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-5’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி, தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுவிட்டதாகவும் ஆற்றல் மிக்கது, பாதுகாப்பானது, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பதெல்லாம் சோதனைகளில் நிரூபணமாகி இருக்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய ஊடக அலுவலகம், ரஷ்ய கூட்டமைப்பின், தேசிய மருந்துகள் பதிவு அமைப்பில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பதிவு செய்யப்பட்டுவிட்டது என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய விஞ்ஞானிகளுடனும் அதிகாரிகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் என்றும் தடுப்பூசி சோதனை விபரங்களை ஆய்வு செய்ய ஆர்வமாக உள்ளதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியின் அனைத்து முன்னேற்றங்களையும் உலக சுகாதார நிறுவனம் வரவேற்கிறது என்றும் ஐரோப்பிய ஊடக அலுவலகம் கூறியுள்ளது.
மேலும், உலகமெங்கும் இதுபோன்ற ஒவ்வொரு தடுப்பூசியும் விரைவானதாகவும் நியாயமானதாகவும் எல்லோரும் நாடுவதற்கு சம வாய்ப்பினை தருவதாகவும் அமைய வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய ஊடக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.