லிந்துலை, பம்பரகலை நடுப்பிரிவு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக இருப்பிடங்களை அமைப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைப்பதற்கும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற கையோடு கண்டியிலிருந்து நுவரெலியாவுக்கு திரும்பிய ஜீவன் தொண்டமான், முதலில் தீயினால் பாதிக்கப்பட்ட லிந்துலை பம்பரகலை நடுப்பிரிவு தோட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
அங்கு தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள 24 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல்கூறிய ஜீவன் தொண்டமான், தற்காலிகமாக தங்குமிட வசதிகளையும், அவர்களுக்கான உலர் உணவுகளையும் வழங்க பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாகவும், அக்கரப்பத்தனை பிரதேச சபையின் ஊடாகவும் ஏற்பாடு செய்தார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், உப தலைவர் பி.சக்திவேல், அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்செல்வன் ஆகியோரும் ஜீவன் தொண்டமானுடன் உடனிருந்தனர்.