லெபனான் வெடிப்பு எதிரொலி: சென்னையிலிருந்து அமோனியம் நைட்ரேட்டை அகற்றும் பணி ஆரம்பம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, August 9, 2020

லெபனான் வெடிப்பு எதிரொலி: சென்னையிலிருந்து அமோனியம் நைட்ரேட்டை அகற்றும் பணி ஆரம்பம்!

சென்னை, மணலி கிடங்கில் இருந்த 740 தொன் அமோனியம் நைட்ரேட்டை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், முதற்கட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) 10 கென்டெய்னர்கள் மூலம் 200 தொன் அம்மோனியம் நைட்ரேட் ஹைதராபாத்திற்கு அனுப்பப்படுகிறது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு நகரில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தென்கொரியாவில் இருந்து சென்னைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட், சென்னை துறைமுகத்தில் சுங்கத்துறையின் சில சட்டப் பிரச்சினைகள் காரணமாக மணலியில் உள்ள சரக்கு கென்டெய்னர் முனையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 37 கென்டெய்னர்களில் 740 தொன் அளவுக்கு இந்த அமோனியம் நைட்ரேட் இருந்தது. எனினும், 2015 இல் வெள்ளத்தின்போது இழப்பு ஏற்பட்ட நிலையிலும், ஆவியானதாலும் தற்போது 690 தொன் அமோனியம் நைட்ரேட் காணப்படுகிறது.

இந்நிலையில் லெபனான் அனுபவத்தைக் கொண்டு, மாசுகட்டுப்பாட்டு வாரியம், நேற்று முன்தினம் அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அங்கிருந்து அகற்றவேண்டும் என சுங்கத்துறைக்கு பரிந்துரைத்தது.

அதனடிப்படையில், அமோனியம் நைட்ரேட்டை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 3 நாட்களுக்குள் இந்த பணிகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.