எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடையத்தில் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பூரணமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் அழுத்தங்களையும் எதிர் காலத்தில் வழங்கும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை(9) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் இன்று மக்களை சந்திக்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு , ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டினை நாங்கள் இன்று மக்கள் மத்தியிலே கொண்டு சென்று கொண்டிருக்கின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும் வரைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களினுடைய உரிமைக்காக பாராளுமன்றத்திலும் ஏனைய சர்வதேச ரீதியிலும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய வகிபாகம் எதிர் வரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாராளுமன்றத்திலே எதிரொலிக்கும்.
மக்களினுடைய ஆணையைப் பெற்று நாங்கள் பலமான ஒரு சக்தியாக ஒரு மக்கள் இயக்கமாக பாராளுமன்றத்திலே எங்களுடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியான கொள்கைப்பாடுடன் உறுதியான எதிர் கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நிச்சயமாக எங்களுடைய பலம் வழியமைக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் மக்களுடைய ஆணையைக் கோரி நிற்கின்றது. மக்களுடைய ஆணை நிச்சயமாக முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
கடந்த தேர்தலில் அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் காலங்களில் மக்கள் எப்படியான ஆதரவை எங்களுக்கு தந்தார்களோ அதே ஆதரவை தருவார்கள் என்ற பூரண நம்பிக்கை இருக்கிறது.
-தமிழ் தேசியக்கூட்டமைப்பை பற்றி பல விமர்சனங்கள் இருக்கின்றன. அது மக்களுக்கு தெரியும்,எங்களுக்கும் தெரியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற ஒரு சிலரின் தவறான கருத்துக்கள், தவறான நடவடிக்கைகள் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பை கண்டிப்பதற்கு மக்கள் முன்னிக்கப் போவதில்லை என்பது எங்களுக்கு தெரியும்.
ஆகவே எதிர் காலத்தில் எங்களுடைய அரசியல் விடுதலைக்கான இந்த ஜனநாயக களத்தில் மக்களை இணைந்து எங்களோடு ஒன்றித்து செய்யப்படுவார்கள் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது.
நாங்கள் நிச்சையமாக இந்த தேர்தலில் வன்னி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடுமையான ஒரு போட்டி இருக்கின்றது என்பதை நாங்கள் மறுக்கவில்லை .இங்கே 405 வேட்பாளர்கள் 45 அரசியல் கட்சிகள் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுகிறார்கள்.பலர் தோல்வியை தழுவுவோம் என்று தெரிந்தும் கூட தேர்தலில் குதித்துள்ளனர்.
பலர் சிங்கள தேசத்தினால் அல்லது தேசியக் கட்சிகளினால் திட்டமிட்டு தமிழ் மக்களுடைய வாக்குகளை பிரித்தெடுப்பதற்கு மிகவும் தந்திரமான முறையில் தமிழ் மக்களுடைய அரசியல் பலத்தை சிதைப்பதற்காக திட்டமிட்டு களமிறக்கப்பட்டிருக்கின்றார்கள்.
கடந்த காலங்களிலே உங்களுக்கு தெரியும் ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தலிலும் கூட்டமைப்பை விட்டு விலகிச் சென்றவர்கள் வெற்றி பெற்ற வரலாறு கிடையாது.
அதே போல் கூட்டமைப்பைத் தவிர இங்கே போட்டியிடுகின்ற சிறிய கட்சிகள் அவர்கள் எல்லாம் இத்தேர்தலிலே கடந்த காலங்களைப் போல் தான் தொடர் தோல்வியை சந்திப்பவர்கள் மீண்டும் மீண்டும் சுயேட்சை அணிகளாகவும்,ஏனைய அரசியல் கட்சிகளுடனும் இணைந்து போட்டியிடுகின்றார்கள்.
கடந்த காலங்களைப் போல் அவர்களை மக்கள் நிராகரிக்கின்ற சந்தர்ப்பம் மீண்டும் வரும்.நாங்கள் ஒற்றுமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதன் ஊடாக நாங்கள் இன்று உங்களுக்கு தெரியும் நாங்கள் இந்த தேர்தலிலேயே கடந்த காலங்களிலே எங்களினுடைய, தமிழ் மக்களுடைய விகிதாசாரத்துக்கு அமைய அந்த வாக்காளர்களுடைய விகிதாசாரத்துக்கு ஏற்ப இங்கே நாங்கள் 5 தமிழ் பிரதி நிதித்துவத்தை பெற்ற வரலாறு இருக்கிறது.
அது இடையிலே அல்லது கடந்த காலங்களில் குறைவடைந்த நிலைமையும் காணப்படுகின்றது.நிசசையமாக இந்த தேர்தலில் மீண்டும் நாங்கள் இந்த வன்னி மாவட்டத்தில் இருக்கின்ற 6 பாராளுமன்ற பிரதி நிதித்துவங்களில் 5 பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை நாங்கள் மீண்டும் பெறுவதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.மக்கள் பூரணமான ஆதரவை வழங்கி கொண்டிருக்கின்றார்கள்.
குற்றச்சாட்டுக்கள் ஒருபுறம் இருக்கின்றன. நாங்கள் அதை மறுப்பதற்கு இல்லை. அந்த குற்றச்சாட்டுகளுக்கு போதிய விளக்கங்களை நாங்கள் கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் தான் எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தொடர்ச்சியாக 18 வருடங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து செயல்பட்டவர்கள் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பை குற்றஞ்சாட்டுகிறார்கள்.
அப்படிப் பார்க்கும் போது கடந்த இரண்டு வருடங்கள் சுமார் 20 வருடங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக பயணிக்கின்ற இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது அங்கத்துவம் வகிக்கின்ற மூன்று கட்சிகளுடன் இணைந்து பயணம் செய்து கொண்டிருக்கின்றது.
-அப்படி பார்க்கும் போது இந்த இரண்டு வருடங்களில் தான் நாங்கள் செய்த தவறுகளை அவர்களால் சுட்டிக்காட்ட முடியும்.-என் என்று சொன்னால் அதற்கு முன்பாக ஏதாவது கூட்டமைப்பு தவறு செய்திருந்தால் நிச்சயமாக அது அவர்களையும் சாரூம். அது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அணியாக இருக்கலாம்.,சுரேஸ் பிரேமச்சந்திரனுடைய கட்சியாக இருக்கலாம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம். அவர்களையும் சாரூம்.
அப்படி பார்க்கின்ற பொழுது இந்த இரண்டு வருடங்களில் நாங்கள் மிகவும் அரசாங்கத்தோடு இணைந்து ஆதரவு வழங்கியதன் காரணமாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றோம்.
அதை யாராலும் மறுக்க முடியாது. அந்த குறிப்பிட்ட காலத்தில் அபிவிருத்தி திட்டங்களும், அதே நேரம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் நாங்கள் கணிசமான முன்னேற்றத்தை கண்டிருக்கின்றோம்.
தேசிய அரசாங்கத்தை அல்லது இந்த கூட்டு அரசாங்கத்தில் நாங்கள் ஒரு ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருந்ததன் காரணமாக இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாங்கள் பாரிய பங்களிப்பைச் செய்து இருக்கின்றோம்.
அது இறுதி இலக்கை அடையாவிட்டாலும் கூட இறுதி வரைக்கும் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அகுறித்த விடையம் மக்களுக்கு தெரியும். சர்வதேசத்திற்கு தெரியும் இடையிலே அரசாங்கம் மாறியதன் காரணமாக ஒரு தேக்க நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ஆனால் எதிர்காலத்தில் நிச்சயமாக எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இந்த இனப்பிரச்சினைக்கான தீர்வு விடையத்தில் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பூரணமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் அழுத்தங்களையும் எதிர் காலத்தில் வழங்கும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.