இந்த கூட்டமைப்பு இனிமேலும் தமிழ் மக்களுக்கு தேவையா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, July 13, 2020

இந்த கூட்டமைப்பு இனிமேலும் தமிழ் மக்களுக்கு தேவையா?

அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று சொல்லமுடியாது போராட்ட காலமென்றால் அடித்துப்பறிக்கலாம் ஜனநாயக வழி அப்படியானதல்ல பேசித்தான் தீர்க்க வேண்டும் அரசியல் தீர்வுக்காக காத்திருக்கும் இடைப்பட்ட காலத்தில் அபிவிருத்தி பற்றியும் சிந்திக்கவேண்டிய அவசியமுள்ளது. அடுத்த பொதுத்தேர்தலுக்குப்பிறகு அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக அமைச்சு பதவிகளைப்பெறுவது பற்றி சிந்திக்கவேண்டி வரலாம். அடுத்தது அமைச்சு பதவிகளைப்பெறுவதானால் எத்தனை அமைச்சுக்கள் எந்த அமைச்சுக்கள் அவற்றிற்குள்ளான அதிகாரங்கள் என்ன என்பது பற்றியெல்லாம்  நாங்கள் பேரம் பேச வேண்டியிருக்கும். பேரம் பேசுவதற்கு அரசியல் பலம் வேண்டும் அந்தப்பலத்தை எதிர்வரும் தேர்தலில் நாங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும் இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் தம்பி சுமந்திரன் நேற்று முன் தினம் செம்பியன்பற்றில் பேசியிருப்பது எமக்கு எந்த ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை.


கடந்த சில நாட்களாக நாங்கள் வெளியிட்டு வந்த சந்தேகம் இப்பொழுது சுமந்திரனால் பகீரங்கமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளாரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சிரேஸ்ட சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா ஊரெழுவில் நடைபெற்ற தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில் ஶ்ரீகாந்தா  மேலும் தெரிவித்ததாவது ஜனாதிபதி கோட்டபயா தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் அரசியல் உறவு மலரத்தொடங்கியுள்ளாக  நாங்கள் சமீபகாலமாக தெரிவித்து வந்துள்ளோம். 
ஜனாதிபதியோடும்  அவரின் அரசாங்கத்துடனும் முரண்படாமலும் மோதல் போக்கை கடைப்பிடிக்காமலும் சமரசம் செய்து கொள்ளவே கூட்டமைப்பு விரும்புகிறது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டிவந்துள்ளோம்.


கடந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் தோற்கடிக்க முயன்ற ஜனாதிபதி கோட்டபயா ராஜபக்சவுடன் இப்போது சமரசம் செய்து கொண்டு பிரச்சனை இல்லாத அரசியலை நடாத்தவே கூட்டமைப்பு தயாராகிறது என்று கூறியிருந்தோம்.


சுமந்திரனின் பேச்சு எமது கருத்து உண்மையானது என்பதை தெட்டத் தெளிவாக்கியிருக்கின்றது.


தமிழ் மக்களின் சார்பில் ஒற்றுமையாக எங்களை பாராளுமன்றத்திக்கு அனுப்புங்கள் அங்கே நாங்கள் உங்களுக்காக போராடுவோம் என்றெல்லாம் கூறி வந்திருப்பவர்கள் தேர்தலுக்கு பிறகு மீண்டும் அமையப்போகின்ற ராஜபக்சே அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்வதற்கு அரசியல் பலத்தை தாருங்கள் என்று தயக்கம் எதுவுமின்றி கோருகின்ற அளவிற்கு இப்பொழுது சீரளிந்து போயிருக்கின்றார்கள்.


இலங்கை ஒரு சிங்கள பவுத்த நாடே என்று ஜனாதிபதி கோட்டபயாவும் பிரதமர் மகிந்தவும் இரண்டு வேவ்வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருந்தனர் அவர்களின் இன்றைய அரசாங்கம் சிங்கள பவுத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலை தினமும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலையில் தேர்தலுக்குப்பிறகு வரும் புதிய ராஜபக்சே அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளுக்கு பேரம் பேசுவதற்கு தமக்கு போதிய அரசியல் பலம் வேண்டும் என்று கூட்டமைப்பு கோருவது வெட்கக்கேடானது.


இனிமேல் தமிழ் மக்களுக்காக போராடுவதற்கு கூட்டமைப்பு தயாராக இல்லை அவர்கள் சுகபோக அரசியல் நடாத்தவே விரும்புகின்றர் சமரச அரசியல் என்ற பெயரில் சரணாகதி அரசியலையே இப்போது கூட்டமைப்பு முன் வைக்கிறது. நாலரை ஆண்டு கால நல்லாட்சி அரசாங்கத்தின் போது அதற்குத்தலைமை தாங்கிய ஐக்கிய தேசிய கட்சிக்கும் அதன் தலைவரான ரணில் விக்கிரமசிங்கேவுக்கும்  வெகு விசுவாசமாக கூட்டமைப்பின் தலைவர்கள் நடந்து கொண்டனர் மூன்று தடவைகள் அவரின் அரசாங்கம் கூட்டமைப்பினால் காப்பாற்றப்பட்டது அதற்கு வெகுமதியாக கம்பரெலிய என்ற பெயரில் இவர்களின் தொகுதி அபிவிருத்திக்காக எழுநூறு கோடி ரூபாய் அள்ளிக்கொடுக்கப்பட்டது அதையும் கூட ஒரு சாதனையாக இப்போது சுமந்திரன் சுட்டிக்காட்டிப்பேசியிருக்கின்றார் ரணில் விக்கிரமசிங்கேவிற்கு ஆதரவு கொடுத்த கூட்டமைப்பு தமிழர்களுக்கென்று உருப்படியாக எதையும் சாதிக்கவில்லை 
புதிய அரசியலமைப்பு தொடர்பான பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது  ஒற்றையாட்சி முறையையும் பவுத்த மதத்திற்கான விசேட அந்தஸ்ததையும் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது இதன் தொடர்ச்சியாகவே இப்போது தோற்றுப்போன ரணில் விக்கிரமசிங்கேவை கைவிட்டு ஆட்சி நடத்தும் ராஜபக்சேவுக்கு  தனது  விசுவாசத்தை மாற்றுவதற்கு தாம் தயார் என இவர்கள் அறிவித்துள்ளனர் இது அப்பட்டமான  அரசியல் விபச்சாரமாகும் .
நடந்து முடிந்த போரில் கொன்று குவிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் போராளிகளின் ஆத்மாக்களில் குத்தும் கொடுரச்செயலாகும் இதற்காக முழுப்பொறுப்பையும் கூட்டமைப்பின் தலைவர்களாகக் கருதப்படும்  சம்பந்தர்  சுமந்திரன் மாவை சேனாதிராசா ஆகியோர் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். 
இந்த கூட்டமைப்பு இனிமேலும் தமிழ் மக்களுக்கு தேவையா? என்பது தான் இப்போது உள்ள கேள்வி. 
எமது இனத்தின் உரிமைகளுக்கான அரசியல் போராட்டத்தை இடை நடுவில் கைவிட்டுவிடாமல் உறுதியுடனும் நிதானத்துடனும் தொடர்ந்து நடாத்தினால் நிச்சயம் நாம் வெற்றி பெற முடியும் இதை உணர்ந்து தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் சரியான தீர்ப்பினை வழங்கவேண்டும்