சமஷ்டித் தீர்வுக்காகவே ஆட்சியாளர்களுடன் பேசுவோம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 19, 2020

சமஷ்டித் தீர்வுக்காகவே ஆட்சியாளர்களுடன் பேசுவோம்!

சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காகவே தமிழ் மக்கள் ஆணை வழங்குகின்றார்கள். அத்தகைய தீர்வினைப் பெறுவதற்காக நாம் தொடர்ந்தும் ஆட்சியில் உள்ளவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்று புளொட் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான த.சித்தார்த்தன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.


அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கடுமையான முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு உங்களுடைய பதில் என்ன?



பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களின் ஏறக்குறைய ஏகோபித்த ஆணையை பெற்ற தரப்பாக இருக்கின்றது. அதிகளவான பிரதிநிதிகளைக் கொண்ட தரப்பாக உள்ளது. அவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியப் பரப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தரப்பாக கூட்டமைப்பு காணப்படுவதால் அந்த இடத்தினை கைப்பற்ற வேண்டுமென்பதில் ஏனை தரப்புக்கள் மிகத்தீவிரமாக உள்ளன. ஆகவே தான் அந்த தரப்புக்கள் பலமாக இருக்கின்ற கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றன.

இதில் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் கூட்டமைப்பினை விமர்சிக்கின்றன என்பதற்கு அப்பால், தேசிய கட்சிகளும், ஆளும் தரப்பு கட்சிகளும் திட்டமிட்டு களமிறக்கப்பட்டுள்ள சுயேட்சைக்குழுக்களும் கூட்டமைப்பினை விமர்சிப்பது தான் வேடிக்கையாக உள்ளது. இந்த விமர்சனங்கள் மக்கள் மத்தியில் சில குழப்பங்களை ஏற்படுத்தினாலும் மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள். அவர்கள் நிச்சயமாக தீர்க்கமான முடிவினை தேர்தலில் வழங்குவார்கள் என்பதில் எனக்கு திடமான நம்பிக்கை உள்ளது.

கேள்வி:- வடக்கு கிழக்கில் கூட்டமைப்பிற்கான அங்கீகாரம் தொடர்ச்சியாக கிடைத்து வந்திருந்தாலும் கடந்த நான்கரை வருடங்களில் அதன் செல்நெறியால் மக்கள் மத்தியில் விமர்சனங்களும், அதிருப்திகளும் ஏற்படவேயில்லை என்று கூறுகின்றீர்களா?



பதில்:- இல்லை நான் அவ்வாறு கூறுவதற்கு விளையவில்லை. அதிருப்திகள் இருக்கின்றன. ஆனால் கூட்டமைப்பு எதனையுமே செய்யவில்லை என்ற வாதத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. 2015ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் மைத்திரி-ரணில் கூட்டரசு அமைக்கப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்புக்களை வழங்கியது. அதுமட்டுமன்றி மைத்திரிபால சிறிசேனவே தன்னை ஜனாதிபதியாக்கிய தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்க மாட்டேன் என்று தான் கூறிவந்தார். ரணில் விக்கிரமசிங்கவும் நல்லெண்ண சமிக்ஞைகளையே காட்டினார்.

அவ்விதமான, நிலைமைகளால் நீண்டகாலமாக நீடிக்கும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் என்ற நாம் எதிர்பார்த்தோம். சர்வதேச தரப்புக்களும் நம்பிக்கை கொண்டிருந்தன. இடைக்கால அறிக்கை வரையில் அந்த முயற்சிகள் சென்றிருந்தபோதும் அதற்கு அப்பாற் செல்வதற்கு தென்னிலங்கை அரசியல் சூழல்கள் சதகமாக அமைந்திருக்கவில்லை. இதற்கெல்லாம் அப்பால் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி என்ற வகையிலும் நாங்களாக முயற்சிகளை குழப்பியவர்களாகவும் ஆகக் கூடாது என்பதற்காக நாம் புதிய அரசியலமைப்பு விடயங்களுக்கு ஒத்துழைப்புக்களை நல்கினாலும் அந்த முயற்சி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருந்தன என்பதை தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தியருக்கின்றேன். ஆகவே மக்களை திசைதிருப்பும் வகையில் நாம் செயற்படவில்லை. யதார்த்தமான விடயங்களை கூறியிருக்கின்றோம்.



இதனைவிடவும், தமிழ் அரசியல் கைதிகள் தற்போது 96பேரே இருக்கின்றார்கள். வலிவடக்கில் மாத்திரம் 4ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான காணிகள் விடுவிடுக்கப்பட்டுள்ளன. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் விடயத்தில் ஐ.நா தீர்மானத்திற்கு அமைவாக அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது.

எனினும் அதன் தலைவரான சாலிய பீரிஸ்ஸே பணிகளை முன்னெடுக்க முடியாத நிலைமை பகிரங்கப்படுத்தியிருந்தார். இவ்விடயங்களுக்கு அப்பால் அபிவிருத்தி விடயத்தில் மயிலிட்டி துறைமுகம், பலாலி விமான நிலையம் என்று கணிசமான அளவு விடயங்கள் மேற்கொண்டிருக்கின்றோம். மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாக நேர்மையாக எம்மாலான செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கின்றோம்.



கேள்வி:- வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் விடயத்திற்கு பொறுப்புக்கூறப்படுமென்ற நம்பிக்கையுடன் இருக்கின்றீர்களா?

பதில்:- இந்த விடயத்தில் நிச்சயமாக பொறுப்புக்கூறப்பட வேண்டும். தற்போதைய ஜனாதிபதியான கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலேயே காணமலாக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆகவே தற்போதைய சூழலில் பொறுப்புக்கூறவல்ல அதிகாரங்களைக் கொண்ட நபராக அவரே காணப்படுகின்றார். அந்த அடிப்படையில் அவர் பொறுப்புக் கூறவேண்டும். அதிலிருந்து விலகிச் செல்ல முடியாது.அதற்கான அழுத்தங்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிச்சியமாக நாம் அடுத்துவரும் காலப்பகுதிகளில் வழங்குவோம்.

கேள்வி:- 13,19ஆவது திருத்தச்சட்டங்களை மாற்றியமைக்கும் நோக்குடன் புதிய அரசியலமைப்பு பற்றி ராஜபக்ஷ தரப்பு கூறுகின்றநிலையில் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு பணிகளுக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக கூறுகின்றதே?



பதில்:- ராஜபக்ஷ தரப்பினுள் உள்ள ஒருசிலரே 13ஆவது திருத்தச்சட்ட நீக்கம் பற்றி பேசுகின்றார்கள். உண்மையில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினை இலங்கை அரசாங்கத்தினால் ஏழுந்தமானமாக நீக்கமுடியாது. அதற்கு இந்தியாவும் அனுமதியளிக்காது.

மறுபக்கத்தில் 19ஆவது திருத்தசட்டத்தினை நீக்கி அதிகாரக் குவிப்பினை மேற்கொள்வதை இலக்காக கொண்டுள்ளார்கள். அவ்வாறிருக்கiயில், அடுத்த ஆட்சியில் புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு அதில் தமிழ் மக்களுக்கான அபிலாஷைகளை உள்ளடக்கிய அர்த்தபுஷ்டியான தீர்வொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் அத்தகைய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியமேற்பட்டால் அப்போது ஒத்துழைப்பளிப்போம் என்றே கூறுகின்றோம். அதனையே நாம் மக்கள் முன்வைத்து ஆணைபெற்றுக்கொள்கின்றோம். வெறுமையான அரசியலமைப்பு திருத்தங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்கப்போவதில்லை.

கேள்வி:- தற்போதைய ஆட்சியாளர்களை மையப்படுத்திய அரசியல் சூழலில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று சாத்தியமென்று கருதுகின்றீர்களா?

பதில்:- சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றைப் பெறுவதற்கே மக்கள் எமக்கு ஆணை வழங்குகின்றார்கள். ஆகவே நாம் அதனை மையப்படுத்தியே நகரவேண்டும். மேலும் தற்போதைய ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் தானாக இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை வழங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க மாட்டார் என்பதை நாம் நன்கு அறிவோம். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாகவே அவர் இனப்பிரச்சினை விடயங்களை கையாளப்போவதில்லை என்று கூறிவிட்டார். தனது சகோதரே அதனை கையாள்வார் என்றும் கூறியிருக்கின்றார்.

யார் கையாள்கின்றனர் என்பதற்கு அப்பால், தமிழ்த் தரப்பு ஒரே அணியாக பலமாகச் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் தான் இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட எந்த விடயமாக இருந்தாலும் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான பலம் எம்மிடமிருக்கும். அதுமட்டுமன்றி பிரிந்து நின்று சர்வதேச ரீதியாக கூட எமது விடயங்களை கையாள முடியாது. அவ்வாறு பிரிந்து நின்று முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றபோது சர்வதேசமும் தமிழர்கள் விடயத்தில் தமது கரிசனையைக் குறைத்துகொண்டு விடுவார்கள்.

கேள்வி:- தற்போதைய ஆட்சியாளர்களுடன் இனப்பிரச்சினை தொடர்பில் பேசுவதால் பயனில்லை என்று கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ரெலோ கூறியுள்ள நிலையில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேசுவதில் பயனில்;லை. ஏற்கனவே நாம் பேச்சுக்களை முன்னெடுத்திருக்கின்றோம். ஆனால் நாம் ஆட்சியில் இருப்பவர்களுடன் பேச்சுவார்த்தைகள் ஊடாக விடயங்களை முயற்சிக்காது இருக்கமுடியாது. அவ்வாறு இருந்தால் எமக்கே தீமை. எனவே எந்த ஆட்சியாளர்கள் ஆட்சிப்பீடத்தில் இருந்தாலும் நிச்சியமாக நாம் பேச்சுக்களை முன்னெடுத்து முயற்சிகளை தொடர்ந்துகொண்டே இருப்போம். 1956இல் தனிச்சிங்களசட்டத்தினை பண்டாரநயக்க கொண்டுவந்த பின்னர் 1958இல் அவருடன் பேச்சுக்களை நடத்தி செல்வா ஒபந்தங்களைச் செய்திருக்கின்றார். ஆகவே நாம் முயற்சிக்காமல் இருக்க முடியாது.