தமிழீழத்தை நோக்கியதே எமது பயணம்: தமிழ் அரசு கட்சி செயலாளர் பகிரங்க அறிவிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 19, 2020

தமிழீழத்தை நோக்கியதே எமது பயணம்: தமிழ் அரசு கட்சி செயலாளர் பகிரங்க அறிவிப்பு!



போராளிகள் ஜனநாயக நீரோட்டத்திற்கு வருகின்றபோது அவர்கள் உரிய கௌரவத்தோடு வரவேற்கப்படுவதும், ஜனநாயகக் கட்சியோடு அவர்கள் இணைந்து செயற்படும் போது அதே கௌரவம் வழங்கப்படுவதும் உலக நாட்டுச் சரித்திரங்கள் எமக்கு எடுத்துச் சொல்லுகின்ற புதிய விடயங்கள் அல்ல. அந்த வகையிலே ஜனநாயகப் போராளிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து இந்த விடுதலைத் தீபத்தை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளருமாகிய கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.


மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் விடுதலையை முன்கொண்டு செல்லுகின்ற ஒரு கட்சியாக இருக்கின்றது. ஜனநாயகப் போராளிககளின் ஆதரவு, அனுசரணை என்பது தொடர்ந்து அந்த விடுதலைப் பயணத்தை ஜனநாயக வழியிலே மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருப்பதும் எமக்குச் சந்தோசமளிக்கின்ற விடயமாகும்.

எழுபதுகளில் தென்னிலங்கையில் இளைஞர் குழு ஆயதமேந்திப் போராடியது. அது ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டது. பின்னர் எண்பதுகளில் அது மீளுயிர்ப்புக் கொண்டது. அதனையும் இலங்கை அரசு தன் இரும்புக் கரம் கொண்டு அடக்கியது. காலவோட்டத்திலே அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து விட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த ஜனதா விமுக்தி பெரமுன என்ற கட்சி எந்தவித இடைஞ்சல்களுமின்றி தன்னுடைய அரசியற் பயணத்தை அந்த அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து அல்லது தனித்து செயற்படுத்திக்கொண்டு வருகின்றது.

ஆனால் ஜனநாயகப் போராளிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கொடுக்கின்ற ஆதரவை வேறொரு சாயம் பூசி அவர்களை ஓரங்கட்டி, எங்களை வேறுவித சட்ட நடவடிக்கைகளுக்குள்ளே இழுக்கும் வகையிலே தென்னகத்திலே இருந்து பல கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.



போராளிகள் ஜனநாயக நீரோட்டத்திற்கு வருகின்றபோது அவர்கள் உரிய கௌரவத்தோடு வரவேற்கப்படுவதும், ஜனநாயகக் கட்சியோடு அவர்கள் இணைந்து செயற்படும் போது அதே கௌரவம் வழங்கப்படுவதும் உலக நாட்டுச் சரித்திரங்கள் எமக்கு எடுத்துச் சொல்லுகின்ற புதிய விடயங்கள் அல்ல. அந்த வகையிலே ஜனநாயகப் போராளிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து இந்த விடுதலைத் தீபத்தை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்திலே தற்போது அபிவிருத்தி என்கின்ற ஒரு சிறிய காற்று இந்த விடுதலைத் தீபத்தை அணைத்து விடுமோ என்று சிலர் அச்சமெழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு அஞ்சத் தேவையில்லை என்கின்ற விடயம் நாங்கள் களத்திற்குச் செல்லும் போது மக்கள் மத்தியில் இருந்து எழுகின்றது.



அடக்கப்பட்ட ஒரு இனம் தன்னுடைய விடுதலைப் பாதையினை வெவ்வேறு விதமாக அமைத்துக் கொண்டாலும் இலட்சியம் ஒன்றாகத் தான் இருக்கின்றது. தமிழீழம் தொடர்பில் வாசுதேவ நாணயக்கார அவர்கள் ஒருமுறை குறிப்பிடுகின்போது “வடக்கு கிழக்கு மாநிலம் தமிழர்களின் தாயகம் என்ற வகையிலே அவர்கள் தங்கள் மாநிலத்திற்கு தமிழீழம் என்று பெயர் சூட்டுவதிலே எந்தவித முரண்பாடும், தடையும் கிடையது” என்று சொல்லியிருந்தார். அவர் அந்த விடயத்தைத் தற்போது மறுக்க முடியும். ஆனால் தமிழீழம் என்பது தமிழ் மாநிலம் என்ற வகையிலே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

அத்தகு தமிழீழத்தை நோக்கியே எமது செயற்பாடு நடைபெறுகின்றது. வருகின்ற தேர்தல் எமது ஜனநாயக வழிமுறையிலே மிகவும் முக்கியமானது. அந்தவகையிலே மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரையிலே 04 பிரதிநிதிகளைத் தெரிவு செய்யக் கூடிய சூழ்நிலை இருக்கின்றது. இந்த நிலையிலே சிங்களப் பௌத்த தேசியவாதத்தை முன்நிறுத்திக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினுடைய மொட்டுக் கட்சியாக இருந்தாலும் சரி, அவர்களுடைய நிழல் கட்சியாக இருக்கின்ற படகாக இருந்தாலும் சரி, எமது அருமையான சூரியனை வாடகைக்கு எடுத்துக் கொண்டிருக்கின்ற பெருந்தேசியவாதிகளின் செல்லப்பிள்ளைகளான அடுத்த கூட்டமாக இருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் எமது வாக்குகளைச் சிதறடித்து இந்த சிதறலின் காரணமாக ஏற்கனவே முஸ்லீம் பிரதநிதிகள் இருவர் தெரிவு செய்யப்பட்ட அந்த நிகழ்வின் தொடர்ச்சியை தற்போதும் உருவாக்க முயற்சிக்கின்றார்கள் என்கின்ற விடயத்தை மனதிலே உள்வாங்கிக் கொண்டு எமது மக்கள் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.