வைத்தியர் ஷாபி இரகசிய அறுவை சிகிச்சை செய்யவில்லை: பரிசோதனையில் உறுதி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 25, 2020

வைத்தியர் ஷாபி இரகசிய அறுவை சிகிச்சை செய்யவில்லை: பரிசோதனையில் உறுதி!



குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியராக இருந்த சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மீது, கருத்தடை விவகார முறைப்பாட்டை முன்வைத்த பெண் ஒருவருக்கு, குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட எச்.எஸ்.ஜி பரிசோதனைகளில், அவரது பெலோபியன் குழாயில் எந்த தடைகளும், தடங்கல்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெலோப்பியன் குழாயில் தடை ஏற்படுத்துவதன் ஊடாக சிங்கள தாய்மார்களுக்கு சட்ட விரோத கருத்தடை செய்தார் என வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையிலேயே, குருணாகல் நீதிமன்றின்ற உத்தரவில் குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில், நதீகா எனும் முறைப்பாட்டாளரான பெண்ணுக்கு எச்.எஸ். ஜி பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுக்கு வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் எல்.ஆர்.டி சத்திர சிகிச்சையை, அப்பெண்ணின் அனுமதியின்று செய்ததாக குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே, நீதிமன்ற உத்தரவில் இந்த எச்.எஸ்.ஜி. பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.




இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை தொடர்பில் சி.ஐ.டி யின் இந்த விவகாரத்தை தற்போது கையாளும் பிரதான பொலிஸ் பரிசோதகர் மொஹான் விஜேகோனும், அந்த பரிசோதனையின் முடிவினை தாய்மார் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி சானக அபேவிக்ரமவும் மன்றில் வெளிப்படுத்தினார்.

இதன்போது குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட எச்.எஸ்.ஜி. பரிசோதனைகளில் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும், குளியாப்பிட்டி வைத்தியசாலை தொடர்பிலேயே நம்பிக்கை இல்லாமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்ட சட்டத்தரணி சானக அபேவிக்ரம, இந்த பரிசோதனை முடிவு வைத்திய மாபியாவின் ஒரு அங்கம் என எண்ணத் தோன்றுவதாக கூறினார்.

சட்டவிரோத கருத்தடை விவகாரம் தொடர்பில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் நேற்று குருணாகல் பிரதான நீதிவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது பிணையில் உள்ள வைத்தியர் ஷாபி மன்றில் ஆஜராகியிருந்தார். அவர் சார்பில் சட்டத்தரணி சமீல் மொஹம்மட் ஆஜரானார்.