கருணா சர்வதேச நியமங்களின் படியே போர் புரிந்தார்; யுத்தத்தில் இரு தரப்பிலும் மரணம் சாதாரணமானது: சிவமோகன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 25, 2020

கருணா சர்வதேச நியமங்களின் படியே போர் புரிந்தார்; யுத்தத்தில் இரு தரப்பிலும் மரணம் சாதாரணமானது: சிவமோகன்!


களத்தில் போராளிகள், படையினர் மரணிப்பது சாதாரண விடயம். அதனைத்தான் கருணா கூறியுள்ளார். யுத்தத்தின் போது நேரடியாக மரணிப்பதை ஒரு விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு யுத்தகலத்தில் நேரடியாக சர்வதேச நியமங்களை ஏற்றுக்கொள்ளாமல் அதனை மீறி ஒரு நடவடிக்கை இடம் பெற்றிருந்தால் மட்டுமே அது ஒரு போர்க் குற்றமாக அல்லது வேறு ஒரு குற்றமாக மாற்றப்படலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் கருணா இருந்த காலத்தில் கூட சர்வதேச நியமங்களை ஏற்றுத்தான் யுத்தங்கள் இடம் பெற்றது. இலங்கை அரசு தான் சர்வதேச நியமங்களை மீறி தமது நாட்டு மக்கள் மீது குண்டுகளை வீசிய செயல்கள் உண்டு என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை(25) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,




தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் நிச்சயமாக அமோக வெற்றி பெற்று ஈழத்தமிழர் விடுதலை நோக்கிய உரிமை போராட்டத்தை முன்னெடுக்கும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கடமையை தமிழர்களுக்காக நிச்சயம் செய்யும். காலத்திற்கு காலம் தேர்தல் ஒன்று வருகின்ற போது தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருக்குலைத்து அதன் வெற்றியை இல்லாமல் செய்ய வேண்டும் என்று சொல்லி மத்திய அரசு கங்கனம் கட்டுவது சாதாரண ஒரு நிகழ்வு.

தேர்தல் இடம் பெறுகின்ற போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரிந்து விட்டது போலும், பல பல கட்சிகள் உருவாக்கப்பட்டது போலும் ஒரு மாயையினை உருவாக்குவார்கள்.



இம்முறை தேர்தல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் ஊடாக வன்னி மாவட்டத்தில் சுமார் 405 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களின் வாக்குகளை சிதைவடையச் செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை தடுப்பதுதான் சுயேட்சைக்குழுக்கள் மற்றும் புதிய கட்சிகளின் நோக்கமாக உள்ளது.

ஒவ்வொறு தேர்தலிலும் குறித்த நடவடிக்கைகள் இடம் பெறுவது வழமை. தேர்தல் முடிவடையும் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றி அடையும். ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருகின்றது என்பதனை யாரும் மறுக்க முடியாது.



இன்று தமிழர்களின் பாதுகாப்பு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கையில் மட்டுமே உள்ளது. சூழல் காலத்திற்கு காலம் மாறி வருகின்றமை உண்மை. ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்தை விடுதலைப்புலிகள் முன்னெடுத்த போது அதன் மீது தாக்கம் செலுத்தியது அமெரிக்கா மீது தாக்கப்பட்ட பாரிய விமான மூலமான தாக்குதல்.

தற்போதைய சூழலில் கூட எந்த நாடு பொறுப்பு எடுக்கின்றது என்பதல்ல. ஐ.நா.சபையின் முன் தற்போது இலங்கை அரசு தற்போது செயல் படுத்துகின்ற பல நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது.



அந்த அடிப்படையில் ஈழத்தமிழர்கள் தமது உரிமைப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு தகுந்த சூழல் உருவாகிக் கொண்டிருக்கின்றது. போர்க்குற்றம் புரிந்தவர்கள் பலர் இந்த ஆட்சியில் பதவிகளில் உள்ளனர். இது இந்த நாட்டிற்கு ஒரு நல்ல சகுனம் இல்லை.

பெருந்தொகையான இராணுவ அதிகாரிகள் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். போர்க் குற்றம் செய்தவர்கள் அரச தலைவரின் வலக்கை, இடக்கையாக உள்ளனர்.

ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனப் படுகொலைகளுக்கும், போர்க் குற்றங்களுக்கும் இந்த அரசு செவி சாய்க்காது என்று சுட்டிக்காட்டி உள்ளது.



சர்வதேச தலையீடு ஈழத்தமிழர்கள் விடையத்தில் தேவைப்படுகின்றது. களத்தில் போராளிகள், படையினர் மரணிப்பது சாதாரண விடயம். அதனைத்தான் கருணா கூறியுள்ளார். யுத்தத்தின் போது நேரடியாக மரணிப்பதை ஒரு விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஒரு யுத்தகலத்தில் நேரடியாக சர்வதேச நியமங்களை ஏற்றுக்கொள்ளாமல் அதனை மீறி ஒரு நடவடிக்கை இடம் பெற்றிருந்தால் மட்டுமே அது ஒரு போர்க் குற்றமாக அல்லது வேறு ஒரு குற்றமாக மாற்றப்படலாம்.

தமிழீழ விடுதலைப்புலிகளை பொறுத்தமட்டில் கருணா இருந்த காலத்தில் கூட சர்வதேச நியமங்களை ஏற்றுத்தான் யுத்தங்கள் இடம் பெற்றது.

இலங்கை அரசு தான் சர்வதேச நியமங்களை மீறி தமது நாட்டு மக்கள் மீது குண்டுகளை வீசிய செயல்கள் உண்டு. எனவே எமது நடவடிக்கைகள் ஈழத் தமிழர்களின் உரிமைகள் சார்ந்தவையாக இருக்கும்.

நாங்களாகவே விரும்பி கொண்டு வந்த 19 ஆவது திருத்தத்தை கூட உருக்குலைத்து விடும் எந்த நடவடிக்கைகளுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பக்கத்தில் இருந்து அரசிற்கு ஆதரவு கிடைக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.