இலங்கைப் பெண்ணின் இரண்டாம் காதல்… தமிழகத்தில் ஒருவர் நடுவீதியில் வெட்டிக் கொலை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 25, 2020

இலங்கைப் பெண்ணின் இரண்டாம் காதல்… தமிழகத்தில் ஒருவர் நடுவீதியில் வெட்டிக் கொலை!குவைத்திற்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண்ணொருவர், காதலித்து திருமணம் செய்த இந்தியர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இலங்கைப் பெண் தலைமறைவாகி விட்டார்.

தமிழகத்தின் தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர் யூசுப் (45). இவரது இரண்டாவது மனைவி அசிலா. இரண்டு பேரும் காயிதே மில்லத் நகரில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதியத்துக்கு மேல் வல்லம் மேம்பாலத்தில் யூசுப் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் காரை மறித்து, காருக்குள் இருந்த யூசுப்பை வெட்டியுள்ளனர்.

வெட்டுப்பட்ட யூசுப், காரிலிருந்து இறங்கி தஞ்சாவூர் சாலையை நோக்கி ஓடியுள்ளார். அப்போதும் அந்த மர்ம நபர்கள் துரத்திச்சென்று ஓட ஓட விரட்டி வெட்டியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த யூசுப், சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். சில கிலோ மீட்டர் தொலைவில் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் என அனைத்தும் அமைந்துள்ள நிலையில், எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலையின் நடுவே தைரியமாக இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.


யூசுப்பின் இயற்பெயர், ஜோசப். அவர், குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இலங்கையை சேர்ந்த அசிலா என்பவரும் குவைத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு, பின்னர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஜோசப்பிற்கு ஏற்கெனவே கல்யாணமாகியிருந்த நிலையிலும் அசிலாவை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே ஜோசப் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அசிலாவை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தார். இதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறியதுடன் ஜோசப் என்ற தன் பெயரை யூசுப் எனவும் மாற்றிக் கொண்டுள்ளார். அசிலாவும் இந்தியா வந்தார். இதையடுத்து, இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இருவரும் தஞ்சாவூரில் வசித்து வந்துள்ளனர். திருமணம் நடந்து சில ஆண்டுகளே ஆன நிலையில், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அசிலாவிற்கு தஞ்சாவூரில் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சொத்துகளைக் கேட்டு அசிலாவிடம் யூசுப் பிரச்னை செய்ததாகவும் தெரிகிறது.

இதுதொடர்பாக இரண்டு பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததைத் தொடர்ந்து, தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலையத்தில் இரண்டு முறை அசிலா யூசுப் மீது புகார் செய்துள்ளார். மேலும், தற்போது அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று யூசுப் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணத்தை போலீஸார் விசாரித்துவருகின்றனர்.


இதற்கிடையே, கரந்தைப் பகுதியிலிருந்த அசிலா தலைமறைவாகிவிட்டார். அவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். அசிலா கிடைத்த பிறகுதான் கொலைக்கான முழு காரணமும் யார் கொலை செய்தார்கள் என்ற விபரமும் தெரிய வரும். மேலும், யூசுப்பின் முதல் மனைவி பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.