கூரை மீதேறி படித்த மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, June 9, 2020

கூரை மீதேறி படித்த மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்!

கேரளாவில் ஆன்லைன் வகுப்பை கவனிக்க சிக்னல் கிடைக்காததால் வீட்டின் கூரை மேல் ஏறி படித்த மாணவிக்கு எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அரசுகள் திட்டமிட்டு வருகிறது. கேரளாவிலும் ஆன்லைன் வகுப்புகளுக்கு அரசு ஏற்பாடுசெய்துள்ளது.

அதன்படி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கூத்தக்கல் பகுதியைசேர்ந்த நமீதா என்ற மாணவி, தனது ஆன்டிராய்டு மொபைலில் சிக்னல் கிடைக்காமல் பாடத்தை கவனிக்க முடியவில்லை. இதனால் மாணவி நமிதா, சிக்னல் சரியாக கிடைப்பதற்காக வீட்டின் கூரை மீது ஏறி அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளை கவனித்தார்.

மாணவி கூரை மீது ஏறி அமர்ந்து பாடம் படிப்பதை அவர் சகோதரி எதேச்சையாக வாட்ஸ்அப்பில் பதிவிட அது தற்போது வைரலாகியது. மாணவியின் ஆர்வத்தை பாராட்டியும், விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டனர். இது அரசின் கவனத்திற்கும் சென்றது. இது தொடர்பாக கோட்டக்கல் எம்.எல்.ஏ. சையத் அபித் ஹூசேன் தாங்கல், முகமது பஷீர் எம்.பி. ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். மேலும் பல தொழில்நுட்ப நிறுவனங்களும் பாராட்டு தெரிவித்ததுடன் அதிவேக இணைப்பு கொடுப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.