யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் நேற்று இளைஞர்கள் சிலர் இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்ட பின்னர், கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (23) மதியம் இந்த சம்பவம் நடந்தது.
உரும்பிராய் சந்திப்பகுதியில் காவல் கடமையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மதியம் முச்சக்கர வண்டியில் சென்ற சில இளைஞர்கள், இராணுவத்தினரை நோக்கி தரக்குறைவாக பேசிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிப்பாய்கள், அதனை தமது முகாமிற்கு அறிவித்துள்ளனர். வாகன இலக்கத்தின் அடிப்படையில் ஊரெழு பகுதியில் வைத்து இளைஞர்கள் மடக்கிப்பிடித்தனர். அந்த இடத்தில் வைத்து இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பின்னர் அவர்கள் உரும்பிராய் சந்தி பகுதிக்கு அழைத்து வரப்பட்டு அங்கும் தாக்கப்பட்டனர்.
பின்னர் கோப்பாய் பொலிசாரிடம் இளைஞர்களை ஒப்படைத்த இராணுவம், முகக்கவசம் அணியவில்லை, தம்மை தாக்க வந்தார்கள், கடமைக்கு இடையூறு விளைவித்தார்கள் என குற்றம்சாட்டினர்.
கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.