தமிழ் மக்களுக்கான விகிதாசார பிரதிநிதித்துவத்திற்கேற்ப வேலைவாய்ப்பு விடயத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை (26) மாலை மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கையானது கடந்த அரசாங்கத்திற்கு மக்களின் நலத்திற்கேற்ப முயற்சிகள் எவையும் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அரசியலிலோ சரி மக்களின் பொருளாதாரம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் எவ்வித முன்னேற்ற நடவடிக்கைகளை கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை என்பதை மக்களாகிய நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். இதை தான் நானும் கூறிக்கொண்டு வருகின்றேன். அம்பாறை மாவட்டத்தில் விகிதாசார பிரதிநிதுத்துவம் தொடர்பான வேலைவாய்ப்பில் தமிழ் மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதே போன்று விவசாயம், குடி நீர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை என்பன தீர்க்கப்படாமல் காணப்படுகிறது. இவற்றை கடந்த பத்து மாதங்களாக அம்பாறை மாவட்டத்தில் கிராமம் கிராமமாக சென்று அவதானித்து வருகின்றேன். இதில் பல மக்கள் பிரச்சினைகளை தீர்த்துள்ளேன்.
இங்கு முஸ்லிம் தலைவர்கள் தேர்தலில் வென்று அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு சேவை செய்கின்றனர். முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நகர அபிவிருத்தி திட்டத்தினை கல்முனை நகரை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கியிருந்தார். அது நல்லவேலை. அவ் அபிவிருத்தி திட்டம் தடைப்பட்டு விட்டது. அது மாத்திரம் நடந்தேறி இருந்தால் தமிழ் கிராமங்கள் இல்லாது போய் இருக்கும்.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைத்து அதனூடாக இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் தமிழ் மக்களிடையே கலாசார சீரழிவு போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும் . இம் மாவட்டத்தின் வளங்கள் குறித்த மக்களுக்கு பயன்படுத்தபடாமல் ஏனைய மாவட்டத்திக்ற்கு பயன்படுத்தப்படுவதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஆட்சி காலத்தில் தமிழ் மக்களது புரையோடிப்போன பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த வாய்ப்பு போன்று இனி ஒருகாலும் கிடைக்கப்போவதில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரலசைத்தால் கடந்த ரணில் தலைமையிலான ஆட்சியை மாற்றக்கூடிய இடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்தது. ஆனால் இனி ஒன்றும் செய்யப்போவது மில்லை என்பதை இங்கு கூடியிருக்கும் மக்களே சாட்சி.
கடந்த கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்பதை கூறிக்கொள்வதோடு எதிர்வரும் காலங்களில் அதனை சத்தமில்லாமல் பாராளுமன்றம் கூட்டப்பட்டவுடன் நிறைவேற்றி தருவேன். அதற்கு உதாரணமாக சாய்ந்தமருது நகரசபையை தடுத்து நிறுத்தியது நான் தான் என்பதை தெளிவாக கூற விரும்புகின்றேன்.
இலங்கையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் போன்று ஆறு பிரதேச செயலகங்களின் பிரச்சினைகள் உள்ளது. ஒரே நாளில் அதி விசேட வர்த்தமானி அறிக்கை மூலம் தரமுயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பில் ஏலவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இது பற்றி பேசியுள்ளேன் என்றார்.