கிளிநொச்சியில் ஆயுதங்களுடன் நுழைந்த ரௌடிகள் வீடுகளில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 7, 2020

கிளிநொச்சியில் ஆயுதங்களுடன் நுழைந்த ரௌடிகள் வீடுகளில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்றிரவு ஊடரங்கின் போது, ரௌடிக்கும்பல் ஒன்று வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன், வாகனங்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்துள்ளதுடன் பெருந்தொகை பணம் நகை என்பவற்றையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 7 பேர் வாள்வெட்டுக்கு இலக்காகி, சிகிச்சைக்கு சென்றனர்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்றிரவு (06) 10.30 மணியளவில் ஊடரங்கின் போது, வீடுகளுக்குள் ரௌடிக்கும்பல் ஒன்று நுழைந்தது.


வாள், கொட்டன் போன்ற ஆயுதங்களுடன் நுழைந்த ரௌடிகள் வீடுகளில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தனர். பெறுமதியான பொருட்கள், வாகனம், உழவு இயந்திரம், மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் வீட்டில் இருந்த பெண்களையும் தாக்கியதுடன், ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகள் என்பவற்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மையில் அந்தப்பகுதியில் ஆடு திருடிய ஒருவன் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டிருந்தான். அந்த கிராமத்திற்கு அயல் கிராமத்தை சேர்ந்தவன் அவன். அந்த பகுதியில் ரௌடிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மடக்கிப்பிடிக்கப்பட்ட திருடன் நையப்புடைக்கப்பட்ட பின்னர், மன்னிப்புக்கோரி

இழப்பீடும் கொடுத்தான். இதன்பின்னர் அந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டது.

அந்த பிரச்சனையின் தொடர்ச்சியாகவே நேற்றைய வாள்வெட்டு நடந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். திருடனை மடக்கிப்பிடித்தவர்களின் வீடுகளே இலக்கு வைக்கப்பட்டன.