இந்தியாவில் விச வாயு கசிவு உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 7, 2020

இந்தியாவில் விச வாயு கசிவு உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு!

ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்றி திறக்கப்பட்டதால் வாயு கசிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிக குறைந்த ஆட்களே பணியில் இருந்தாதல் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் இது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என மாநில டிஜிபி கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் சர்வதேச நிறுவனத்திற்கு சொந்தமான இரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை ஊரடங்கு காரணமாக கடந்த பல நாட்களாக மூடப்பட்டிருந்தது. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று இரவு இந்த தொழிற்சாலை போதிய முன்னெச்சரிக்கை இன்றி, நேற்று நள்ளிரவு திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


தொடர்ந்து அதிகாலை 2: 30 மணியளவில் பராமரிப்பில்லாமல் இருந்த டாங்குகளில் இருந்த வாயு கசிய துவங்கியது. இதனால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறும், மின்சாதனங்களை இயக்க வேண்டாம் எனவும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அந்த தொழிற்சாலையை சுற்றியுள்ள 3 கிராமங்கள் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காஸ் கசிவு ஏற்பட்டதும், சாலைகளில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் அருகில் நின்றவர்கள் அங்கேயே மயங்கி விழுந்தனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. டூவிலர்களில் சென்றவர்கள், வாயு கசிவால் பாதிக்கப்பட்டு பள்ளத்தில் விழுந்தனர்.

மற்றொரு பெண், இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். ஏராளமானோருக்கு கண்களில் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. சாலைகளில் மயங்கி கிடந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில், ஒரே கட்டிலில் 3 பேர் வரை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள். பலருக்கு சுயநினைவு இல்லாமல் உள்ளனர்.