“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையோ அல்லது அவர் தலைமையிலான அரசையோ வெருட்டி – மிரட்டித் தீர்வு பெற முயற்சிப்பது பயனற்றது. இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புரிந்துகொள்ள வேண்டும்.”
– இவ்வாறு ராஜபக்ச அரசின் பேச்சாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இலங்கை அரசை மீறி சர்வதேசம் எதையும் செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘சர்வதேசம் எங்களைக் கைவிடாது என்று நம்புகின்றோம். தமிழருக்கு ஒரு தீர்வு கிடைப்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் தடுக்க முடியாது. எவராலும் தடுக்க முடியாது’ என்று தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரவணைத்துப் பயணிக்கவே அரசு விரும்புகின்றது. ஆனால், கூட்டமைப்பு ழைய நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது. அவர்கள் தங்கள் நிலைப்பாடுகளைத் தற்காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். புதிய வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அரசுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். தமிழர்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு இந்த அரசு தீர்வு வழங்கும். ஆனால், நாட்டிலுள்ள அனைவரும் ஏற்கும் தீர்வையே வழங்குவோம். தமிழீழ விடுதலைப்புலிகளின் பாணியில் மிரட்டித் தீர்வைக் கேட்பதைக் கூட்டமைப்பின் கைவிட வேண்டும். தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை எப்படி எந்தவேளையில் வழங்குவது என்று அரசுக்குத் தெரியும்” – என்றார்.