தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் தாயகத்தில் இயங்கும் அரசியல் தரப்புக்களை நோக்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் ! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 21, 2020

தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் தாயகத்தில் இயங்கும் அரசியல் தரப்புக்களை நோக்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் !

இலங்கைத்தீவின் தமிழர் தாயகத்தில் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் இயங்கி வரும் கட்சிகள், அமைப்புக்கள் இரண்டு பிரகடனங்களை உடனடியாயக செய்ய வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

மே18 - முள்ளிவாய்க்கால் தமிழிழனஅழிப்பின் தமிழீழத் தேசிய துக்க நாள் உரையின் போது, இவ்வேண்டுகோளினை விடுத்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், சிறிலங்கா அரசு சிங்கள பௌத்த இனவாத அரசாக இறுக்கமடைந்திருக்கும் இச் சூழலில் அக் கட்டமைப்புக்குள் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணுதல் சாத்தியமானதல்ல என்பதனைப் பகிரங்கமாக அறிவிப்பதுடன்,  தமிழர் தேசம் சிங்கள தேசத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்பதனையும் பிரகடனப்படுத்துமாறு தாயகத் தமிழ் அரசியல் தலைவர்களை வேண்டுகிறோம். இப் பிரகடனம் சிறிலங்காவின் தற்போதய சட்டதிட்டங்களுக்கு முரணானது அல்ல என்பதனையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

இப் பிரகடனம் சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராக உலகத் தமிழினம் ஒருங்கிணைந்து போராடுவதற்கான நல்வாய்ப்பினைத் தரும். சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான எமது போராட்டம் அரசியல், இராசதந்திர வழிமுறைகளில் அமையும் வகையில் நாம் ஒருங்கிணைந்த திட்டத்தினை வகுத்துக் கொள்ளலாம் என அவர் தனதுரையில் தெரிவித்துள்ளதோடு,  முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பின் 11 ஆவது ஆண்டு நினைவு நாளில் இவ் விடயம் குறித்து சிந்திக்குமாறும், இது குறித்து ஒரு காத்திரமான முடிவை எடுக்குமாறும் நாம் தாயகத்தின் தமிழ்த் தேசியக் கட்சிகளைக் கோருகிறோம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழர் தேசத்தின் மீதான சிங்கள அரசின் மேலாண்மையினை நிராகரிக்கும் அரசியல் முடிவை அழுத்தமாக எடுக்காமல் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியாது. அது மட்டுமன்றி சிங்கள மேலாண்மை மீதான எதிர்ப்பை வலுப்படுத்தாவிடின் இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உட்படாது பாதுகாப்பதும் சிரமமானதாக அமையும் எனவும் தனதுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு தமிழர் தாயகத்தின் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் அரசியல் தரப்புக்களை நோக்கி விடுக்கப்பட்ட அழைப்பினை உள்ளடக்கியிருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையின் முழுவிபரம் :

2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் தமிழீழ தேசம், சிங்கள பௌத்த பேரினவாதப்பூதத்தின் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வதைக்கப்பட்டதை உலகத் தமிழ் மக்கள் தம் நினைவில் நிறுத்தி நினைவு கொள்ளும் நாள்.

தமிழீழ மக்கள் தமது இறைமையினை மீட்டெடுத்து தன்னாட்சியை நிலைநிறுத்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமையில் நடாத்திய ஆயுதம் தாங்கிய விடுதலைப்போராட்டத்தை உலகின் பல சக்தி வாய்ந்த அரசுகளின் உதவியுடன் தமிழின அழிப்பின் ஊடாக சிறிலங்கா அரசு ஒடுக்கிய நாட்களின் நினைவு நாள்.

சுதந்திரமும், சமத்துவமும், சமூகநீதியும் நிலவும் அரசொன்றுக்கு உலகில் முன்னுதாரணமாக இயங்கி வந்த தமிழீழ நடைமுறையரசினை சிங்கள தேசம் ஆக்கிரமித்துக் கொண்டதனை நாம் நமது நினைவில் நிறுத்தும் நாள்.

இன்றைக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னர் இந் நாட்களில் எமது மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டனர். மக்களைக் கொன்றொழிப்பதன் மூலம்தான் தமிழீழ மண்ணை ஆக்கிரமிக்க முடியும் என்பதனை நன்கு உணர்ந்து, அதற்கேற்பத் திட்டங்களை வகுத்து, சிங்களம் இந் நாட்களில் நடாத்திய நரபலி வேட்டை உலக சமுதாயத்தினை நடுநடுங்க வைக்கக் கூடியது.

எவரைப் பலி கொடுத்தாயினும் தமது நலன்களை அடைந்து கொள்வதற்காக நிர்வாணமாக அலையும் சில உலக அரசுகள், தமது நலன்களை அடைந்து கொள்ள தமிழ் மக்களின் குருதியில் நனைந்தவாறு சிங்கள அரசின் தமிழின அழிப்புக்குத் துணை போயினர்.

அனைத்துலக சமூகம் நீதியின்பால் நிற்கும் என எதிர்பார்த்த நீதியினை அவாவும் உலக மக்கள் வாயடைத்துப் போயினர். ஒரு பெரும் இனவழிப்பு நடந்து முடிந்தது.

தமிழ் மக்கள் தம்மை இனவழிப்பில் இருந்து பாதுகாத்து, தம்மை ஒரு தேசமாக நிலைநிறுத்தி வாழ இறைமையும், சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தனியரசை அமைப்பது மட்டுமே ஒரே ஒரு தெரிவு என்பதனை முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு முரசறைந்து சொல்லியிருக்கிறது.

இத் தமிழினவழிப்பு தமிழ் மக்கள் மத்தியில்ஏற்படுத்தியுள்ள ரணம் வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. தலைமுறை தலைமுறையாகத் தமிழ் மக்கள் தமது கூட்டுநினைவுகளில் உள்ளிருத்தி வைத்திருக்கும் ஆறாத வடுக்கள் இவை.

இந் நினைவுகள் எமக்குள் ஒரு பெருந் துயரினை ஏற்படுத்தியிருக்கின்றன. தமிழர் தேசம் சுமந்திருக்கும் பெரும் துயர் இது. இத் துயரை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழத் தேசிய துக்கநாளாகக் கடந்த 10 வருடங்களாக அனுட்டித்து வருகிறது.

இப் பெருந்துயரில் இருந்து நாம் உறுதியினை உள்வாங்கிக் கொள்கிறோம். இவ் உறுதியுடன் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பில் கொல்லப்பட்டவர்களுக்குத் தலை சாய்த்து வணக்கம் செலுத்திக் கொள்கிறோம். முள்ளிவாய்க்;கால் இனவழிப்பின் நினைவுகள் தமிழீழ மக்கள் தமது சுதந்திரத் தாய்நாட்டை உருவாக்கிக் கொள்வதற்காகத் தருகிற ஆன்மபலத்துடன் எமது செயற்பாடுகளை உறுதியுடன் முன்னெடுக்க உறுதி பூண்டு கொள்கிறோம்.

அன்பான தமிழ் மக்களே,

முள்ளிவாய்க்கால் நினைவுகளின் 11 ஆவது ஆண்டு நினைவை நாம் மனதில் கொள்ளும் இந் நாட்களில் கொரோணா பெருந்தொற்றால் உலகு பெரும் நெருக்கடியினைச் சந்தித்து நிற்கிறது.

இப் பெரும் நோய்த்தொற்று உலகில் ஏற்படுத்தும், ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் குறித்து பல்வேறு அறிஞர்களும், ஆய்வாளர்களும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந் நோய்த் தொற்றுக் காரணமாக முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவுகளை நாம் வழக்கத்துக்கு மாறான முறையில் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி மக்கள் நேரடியாக ஒன்றுகூடாத நிலையில் virtual வெளியில் ஏற்பாடு செய்துள்ளோம். தொலைத் தொடர்புத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தேச உருவாக்கத்திலும் தேச மக்கள் ஒருவரோடு மற்றவர் தம்மை இணைத்துக் கொள்வதிலும் பல புதிய வாய்;ப்;புக்களை உருவாக்கித் தருவதனையும் நாம் நன்கு அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இன்றைய தினம் நாம் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக எமது வீடுகளில் சுடரேற்றி வணக்கம் செலுத்துவதுடன், முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் பட்ட துயரினை எம்முள் நினவிருத்தும் வகையில் எமது இன்றைய உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியினை உட்கொள்ளுகிறோம்.

உலகெங்கும் இணைக்கப்பட்ட வகையில் நாம் இன்று தொலைத்தொடர்புத் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வினையும் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் சிறிலங்கா அரசின் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்குத் தமிழ் மக்கள் வழங்கிய எதிர்ப்பின் ஒரு வடிவமாகும் சிங்கள தேசம் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பின் ஓராண்டு பூர்த்தியை வெற்றி ஆரவாரங்களுடன் கொண்டாடும் போது நாம் தார்மீகக் கோபத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அங்குரார்ப்பணம் செய்தோம்.

கடந்த 10 ஆண்டுகளாகச் செயற்பட்டு வரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையின் குறியீடாகத் தன்னை அடையாளப் படுத்தியிருக்கிறது.
தமிழீழ மண்மீது தாம் மேற்கொள்ளும் இனவழிப்பின் ஊடாகவும், ஆக்கிரமிப்புச் செய்வதன் ஊடாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமையில் தமிழ் மக்கள் நடாத்தி வந்த ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பதன் மூலமாகவும், தமிழர் தேசத்தின் சுதந்திரத் தாய்நாட்டுக்கான போராட்டத்தை – தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையினை இல்லாதொழிக்கலாம் என்ற சிங்களத்தின் எதிர்பார்;ப்பை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முறியடித்திருக்கிறது.

தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு தமிழீழத் தனியரசை உள்ளடக்கிய தீர்வு குறித்த பொதுமக்கள் வாக்கெடுப்பு நடாத்தல், தமிழின அழிப்புக்கு எதிராக சிங்கள அரசினை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்தல் போன்ற நிலைப்பாட்டுக்கு அனைத்துலக ஆதரவு தேடும் முயற்சியில் நாம் முன்னேறி வருகிறோம்.

இவ் விடயங்கள் குறித்த அனைத்துலகப் பொறிமுறை, அரசுகளின் கையிலுள்ள ஒரு பொறிமுறையாக இருக்கும் நிலை இம் முயற்சிகளில் நாம் இன்று எதிர்கொள்ளும் பிரதான சவாலாக இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையும் அதனோடு இணைந்த பொறிமுறைகளும் மனித உரிமைப் பேரவை உட்பட அரச பொறிமுறைகளாகவே உள்ளன. இதனால் இங்கு எடுக்கப்படும் முடிவுகளும் அரசுகள் சார்பானவையாக இருக்கின்றன. இதனால் நாம் பாதிக்கப்பட்ட மக்கள் சார்ந்த பொறிமுறையினை வளர்த்தெடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம். இது குறித்த முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.

அன்பான மக்களே!

முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நடைபெற்று கடந்த 11 ஆண்டுகளில் தமிழர் தாயகம் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட தேசமாக இருந்து வருகிறது. இக் காலகட்டத்தில் சிங்கள தேசத்தினை ஆட்சி செய்த எந்த ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து கிஞ்சித்தும் அக்கறை கொள்ளவில்லை என்பதே யதார்த்தமாக இருந்திருக்கிறது.

இனவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட இராஜபக்ச குடும்ப ஆட்சி மட்டுமல்ல, நல்லாட்சி என்று தம்மை அழைத்துக் கொண்ட, தமிழர் தரப்பின் உதவியுடன் ஆட்சிபீடம் ஏறிய ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு இதயசுத்தியுடனான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை.

இது நாம் ஆரம்பகாலத்தில் இருந்து கூறிவந்தது போல சிறிலங்கா அரசின் இனவாதப்போக்கினை நன்கு வெளிப்படுத்துகிறது. சிறிலங்கா அரசு ஓர் இனவாதஅரசாக இறுக்கமடைந்திருக்கும் ஒரு சூழலில் எந்த ஆட்சியாளர்களாலும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு நீதியான தீர்வை வழங்க முடியாதென்பது தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளாக சர்வதேச சமூகம் நிலைமாற்றுக்கால நீதி மூலம் போர்க்குற்றங்கள், மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றுக்கு பரிகாரம் தேட முடியும், தேடுவோம் எனவே கூறி வந்தார்கள். இதே பத்து ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது நிலைமாற்றுக்கால நீதிக்குத் தேவையான அரசியல் வெளி இல்லை என்பதையே அது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
மேலும் நிலைமாற்றுக்கால நீதி விடயத்தில் அரசுகள் மாறும் போது புதிதாக வந்த அரசு அதற்கு முன்னிருந்த அரசின் குற்றங்களை விசாரித்து நீதி வழங்கும்  முறைமையே காணப்படுவது வழக்கம். இக்கூற்றுக்கு ஆதாரமாக வரலாற்றை நோக்கினோமானால், கம்போடியாவாக இருந்தாலென்ன, சேர்பியாவாக இருந்தாலென்ன, ருவாண்டாவாக இருந்தாலென்ன, இதுவேதான் நடந்தது. அதே பின்னணியில்தான் 2015 இல் சிறீலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் கூட நிலைமாற்றுக்கால நீதிக்கு நிச்சயம் வழிகோலும் என்றே சர்வதேசமும் நம்பியது.

ஆனாலும் உண்மையில் நடந்தேறியது என்னவெனில் 2015இல் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் நிலை மாற்றுக்கால நீதியை விலக்கிய நடத்தையின் (impunity) மேலுமொரு நவீன வடிவமாகவே (a sophisticated form) தன்னை நடத்திக் கொண்டது.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் அணுகுமுறையானது சர்வதேச குற்றங்கள் புரிந்தது அன்றைய ஆட்சி மட்டுமல்ல சிறீPலங்கா தேசமே தான் என்ற உண்மையை, எமக்கு ஏற்கெனவே தெரிந்த அந்த உண்மையை உலகுக்கு எடுத்து இயம்பியது.

இச் சூழலில் தெடர்ந்து நிலைமாற்றுக்கால நீதியை (transitional justice) பற்றிப் பேசுவது வெறும் காலத்தை வீணடிக்கும் வேலையாகவே இருக்கும் என்பதும், நீதியைப் புறந்தள்ளிய வகையில் கட்டுமானமயப் படுத்தப்படட (ளவசரஉவரசயட  பநழெஉனைந) தொடர்ந்தும் இடம்பெற வழி சமைக்கும் எனவும் நாம் நம்புகிறோம்.

இந்நிலையில் யதார்த்தமான, புதியதோர் அணுகுமுறையை சர்வதேச சமுதாயம் மேற்கொள்ளவேண்டும் என்றே நாம் இன்று அறைகூவல் விடுக்கின்றோம்.

ஈடுசெய் நீதி (Remedial Justice) என்ற கோட்பாடு தான் அதற்கான மாற்றுவழி என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது. இனக்கொலை புரிந்த சிங்கள அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும், சிறீPலங்கா தேசத்தை இன அழிப்புக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தத்துக்கு முரணாகச் செயற்பட்ட காரணத்தின் அடிப்படையில் சர்வதேச நீதி மன்றத்துக்கும் கொண்டு செல்வது என்ற இரண்டு அம்சங்களும் ஈடுசெய் நீதி  (Remedial Justice) நிகழ்ச்சி நிரலின் இரண்;டு முக்கிய அம்சங்களாக அமையுமெனவே இன்றைய சூழலில் நாம் கருதுகிறோம்.

'நல்லாட்சி' அரசாங்கத்தின் பின் ஆட்சிபீடம் ஏறியிருக்கும் இராஜபக்ச குடும்பத்தின் காலத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை மேலும் நிலைநிறுத்தும் முயற்சிகள் வலுப்பெறும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

கொரோணா பெரும் நோய்த் தொற்று உலகளாவியரீதியில் அரசுகளைப் பலப்படுத்தியிருக்கும் ஒரு சூழலில், சிறிலங்காவிலும் அரசு ஒரு பலமிக்க நிறுவனமாக மக்கள் மத்தியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

இதனால், தமிழ் மக்கள் மீது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை மேலும் நிலைநிறுத்தும் முயற்சியில் கொரோனா பெரும் நோய்த்தொற்;று அரசுகளுக்குத் தந்த வாய்ப்பினை சிறிலங்கா அரசு நன்கு பயன் படுத்தும் என்றே நாம் எதிர்பார்க்க முடியும்.

இத்தகையதொரு சூழலில், தாயகத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் அரசியல் அமைப்புகளுக்கு நாம் இன்றைய தினத்தில் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம்.

சிறிலங்கா அரசு சிங்கள பௌத்த இனவாத அரசாக இறுக்கமடைந்திருக்கும் இச் சூழலில் அக் கட்டமைப்புக்குள் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணுதல் சாத்தியமானதல்ல என்பதனைப் பகிரங்கமாக அறிவிப்பதுடன்,  தமிழர் தேசம் சிங்கள தேசத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்பதனையும் பிரகடனப்படுத்துமாறு தாயகத் தமிழ் அரசியல் தலைவர்களை வேண்டுகிறோம். இப் பிரகடனம் சிறிலங்காவின் தற்போதய சட்டதிட்டங்களுக்கு முரணானது அல்ல என்பதனையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

இப் பிரகடனம் சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராக உலகத் தமிழினம் ஒருங்கிணைந்து போராடுவதற்கான நல்வாய்ப்பினைத் தரும். சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான எமது போராட்டம் அரசியல், இராசதந்திர வழிமுறைகளில் அமையும் வகையில் நாம் ஒருங்கிணைந்த திட்டத்தினை வகுத்துக் கொள்ளலாம்.

முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பின் 11 ஆவது ஆண்டு நினைவு நாளில் இவ் விடயம் குறித்து சிந்திக்குமாறும், இது குறித்து ஒரு காத்திரமான முடிவை எடுக்குமாறும் நாம் தாயகத்தின் தமிழ்த் தேசியக் கட்சிகளைக் கோருகிறோம்.

தமிழர் தேசத்தின் மீதான சிங்கள அரசின் மேலாண்மையினை நிராகரிக்கும் அரசியல் முடிவை அழுத்தமாக எடுக்காமல் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியாது. அது மட்டுமன்றி சிங்கள மேலாண்மை மீதான எதிர்ப்பை வலுப்படுத்தாவிடின் இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உட்படாது பாதுகாப்பதும் சிரமமானதாக அமையும்.

முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பில் ஆகுதியானோர் நினைவுகளை மீண்டும் எம்முள் இருத்தி, மாவீரர்கள் நினைவு நமக்குத் தரும் நெஞ்சுரத்துடன் உரிமைப்போராட்டத்தில் முன்னோக்கி நகர்வோமாக!


இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மே18-தமிழீழத் தேசிய துக்க நாள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.