வங்காளதேசத்தில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து ஐவர் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 28, 2020

வங்காளதேசத்தில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து ஐவர் பலி!

வங்காளதேசத்தில் மருத்துவமனை ஒன்றின் கொரோனா பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.

வங்காளதேசத்தின் டாக்கா நகரில் குல்ஷான் சந்தை பகுதியையடுத்து அமைந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு என தரை தளத்தில் தனி பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது.இன்று இரவு 10 மணியளவில் இந்த பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றனர். தொடர்ந்து அவர்கள் மீட்பு பணியையும் மேற்கொண்டனர். இதில், ஒரு பெண் மற்றும் 4 ஆண் என 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.


இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் தெரியவரவில்லை என போலீசார் கூறியுள்ளனர். ஏ.சி. வெடித்து அடுத்தடுத்து தீ பரவியதில் 5 பேரும் பலியாகி உள்ளனர் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்தில் பலியானவர்கள் கொரோனா பாதித்த நபர்களா அல்லது வேறு நபர்களா என்பது பற்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளிவரவில்லை. தீயை அணைக்க போதிய வசதிகள் அந்த பிரிவில் இல்லை என தீயணைப்பு சேவைக்கான தலைவர் சஜ்ஜத் ஹுசைன் கூறியுள்ளார். தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் என்ன? என்பது பற்றிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.