தெலங்கானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அதன் முதல் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பப்பன்னாபேட் மண்டலில், கோவர்தன் என்பவரின் 3 வயது மகன் ஷாய் வர்தன். தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் நேற்று விவசாய நிலத்தில் நடந்து சென்ற போது, தவறுதலாக மூடப்படாத 120 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டான்.
முதலில் 25 அடியில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, மண் சரிவு ஏற்பட்டதால், குழந்தை கீழிறங்கியது
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
போர்வெல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு கிணறு தோண்டப்பட்டது. இரவு நேரமானதால் விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.
இந்நிலையில், இன்று காலை 3 வயது சிறுவனை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சடலமாக மீட்டது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையில் ஷாய் வர்தனின் சடலம் வெளியில் எடுக்கப்பட்ட முதல் வீடியோ வெளியாகயுள்ளது, இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.