யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கைதி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 5, 2020

யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கைதி



யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயன்ற போதைப்பொருள் சந்தேக நபர் ஒருவர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த போதைப்பொருள் குற்றச்சாட்டில் உள்ள விளக்கமறியல் சந்தேக நபரே தப்பித்துள்ளார்.

சந்தேகநபர் வைத்தியசாலைக்கு அண்மையாக உள்ள கூலர் நிறுவனம் ஒன்றில் தரித்து நின்ற படிரக வாகனம் ஒன்றை எடுத்துத் தப்பிச் சென்ற நிலையில் , குறித்த வாகனத்தை கல்வியங்காடு பகுதியில் கைவிட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேக நபர் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மீளவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்ற நிலையில் சந்தேக நபர் தப்பிச்சென்ற படி ரக வாகனத்தையும் பொலிஸார் இன்று காலை மீட்டனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் சந்தேக நபர் நேற்று தூக்கிட்டு உயிரை மாய்க்க முற்பட்டதை கண்ட சிறை உத்தியோகத்தர்கள் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். எனினும் சந்தேக நபர் மூச்சடங்கிய நிலையில் காணப்பட்டதால் உடனடியாக அவரை யாழ்போதனா வைத்தியசாலையில் சிறை உத்தியோகத்தர்கள் சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பை மீறி சந்தேக நபர் தப்பித்துள்ளார்.

இந்த நிலையில் சந்தேக நபர் தப்பிச்சென்ற வாகனத்தில் உள்ள இலக்கத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்த நிலையில் வாகன உரிமையாளரால் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் கல்வியங்காடு பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸார் வாகனத்தை மீட்டெடுத்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்ததன் பிரகாரம் தப்பிச்சென்ற சந்தேக நபர் மீளவும் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தில் சந்தேக நபரால் எடுத்துச் செல்லப்பட்ட படி வாகனம் நாளை நீதிமன்றில் ஒப்படைக்ககப்படும் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.