மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு – 2000 கோடி ரூபாய் வழங்குமாறு பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, May 11, 2020

மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு – 2000 கோடி ரூபாய் வழங்குமாறு பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்திற்கு மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்ய சிறப்பு நிதியாக உடனடியாக 2000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3ஆம் கட்டமாக ஊரடங்கு அமுலில் உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
இதன்போது மத்திய அரசிடம் ஏற்கனவே கோரியிருந்த ரூ. 2,000 கோடியை விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி முன்வைத்த கோரிக்கைகளின் முக்கிய அம்சங்கள்:
  • 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியத்தை ரொக்கமாகவே வழங்கிட வேண்டும்.
  • பிசிஆர் பரிசோதனைக் கருவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.
  • மருத்துவ உபகரணங்களை மேம்படுத்த, முந்தைய காணொலிக் காட்சி வாயிலான உரையாடலின்போது ஏற்கனவே வலியுறுத்திய ரூ. 2,000 கோடியை வழங்க வேண்டும்.
  • நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை விடுவிக்க வேண்டும்.
  • மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொள்முதல் செய்வதற்காகவும் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பவதற்காகவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 1,000 கோடி வழங்க வேண்டும். இந்த மொத்த செலவையும் தற்போது மாநில அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.
  • அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக உணவு தானியங்களை வழங்கிட வேண்டும்.
  • விமான சேவைகளை மே 31 வரை தொடங்க வேண்டாம்.
  • சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் இருப்பதால், தமிழகத்தில் மே 31 வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம்.