எமது இடங்களின் பெயர்கள் பறிபோய், எமது மொழி பறிபோய், எமது மதங்கள் பறிபோய், தமிழர்கள் முன்னர் வாழ்ந்த இடங்கள் இவைதான் என்று சரித்திரம் எதிர்காலத்தில் கூறாதிருக்கத்தான் வடகிழக்கு இணைக்கப்பட்டு தமிழ்ப்பேசும் இடங்களாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இந்தத் தேவை எமது வருங்காலங் கருதி எமக்குண்டு. அதைச் சிங்கள அரசியல் வாதிகள் எதிர்க்கின்றார்கள் என்ற காரணத்தால் வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா என்று கேட்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன்.
அவர் அனுப்பி வைத்துள்ள வாராந்த கேள்வி பதில் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கங்களுடன் சேர்வதைப் பற்றி எமது உரிமைகள் கிடைத்த பின்னரே சிந்திக்க வேண்டும். இல்லையென்றால் நாம் ஏமாற்றப்படுவோம். திரு.சம்பந்தன் அவர்கள் 2016 தொடக்கம் சிங்கள அரசியல்வாதிகள் அரசியல்த் தீர்வை தமிழர்களுக்குத் தருவார்கள் என்று உண்மையாகவே நம்பினார். ஒவ்வொரு வருடமும் அவரின் நம்பிக்கையை வெளிக்கூறினார். ஆனால் நடந்தது என்ன? பறிக்க வேண்டியவற்றைப் பெற பலமுள்ளவனுடன் சேர்ந்தால் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்பதுதான் யதார்த்தம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில்,
வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா? முதலில் வடக்கை எடுத்துக்கொள்வோம். கொரோனாவின் நிமித்தம் தற்போது வடமாகாணம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கும் அப்படியே. ஒரே நாட்டில் இவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது நாட்டின் மற்றைய பாகங்களிடம் இருந்து தமிழ்ப் பேசும் வடக்கு கிழக்கு தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. தனிமைப்படுத்தப்பட்டும் நாம் இப்பொழுதும் ஒரே நாட்டினுள் தனித்து வாழ்கின்றோம் அல்லவா? ஆகவே தனித்து வாழ்வது அல்ல பிரச்சனை. அவ்வாறு தனித்து வாழ சிங்களவர்கள் விடுவார்களா, அனுமதிப்பார்களா என்பதே உங்கள் கேள்வி.
இதுவரை காலமும் அவ்வாறு தனித்து வாழ சிங்கள அரசியல் வாதிகள் எதிர்ப்புக்காட்டி வந்தபடியால் இது இனி சாத்தியமாகுமா என்பதே உங்கள் கரிசனை.
ஒரு பிரச்சனைக்கு பல விதங்களில் தீர்வு காணலாம். சிங்கள அரசியல் வாதிகள் இதுகாறும் எமது பிரச்சனைக்கு தீர்வு கண்டு வருவது தமிழர்களுக்கு அவ்வாறான ஒரு பிரச்சனையே இல்லை என்று கூறியே. இவ்வாறு கூறி காலத்தைக் கடத்தினால் தமிழ் மக்கள் களைத்துப் போவார்கள், தங்கள் வழிக்கு வருவார்கள், வடக்கையும் கிழக்கையும் சிங்கள பௌத்த மயம் ஆக்கிவிடலாம் என்று நினைக்கின்றார்கள்.
அவர்களின் அந்த யுக்திக்கு, தீர்வுமுறைக்குத் தீனி போடுபவர்கள் தமிழ் சகோதரர்களாகிய உங்களைப் போன்றவர்களே. வடக்கும் கிழக்கும் முன்னர் 18 வருடங்கள் இணைக்கப்பட்டு இருந்தன. அதை உச்ச நீதிமன்ற சிங்கள நீதியரசர்கள் பிரித்தார்கள். பிரித்து சுமார் 13 வருடங்கள் ஆகிவிட்டன. வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா என்று சிறிதும் சிந்திக்காமலே இவ்வாறு கேட்கின்றீர்கள். வடகிழக்கு இணைப்பு ஏன்? எதற்காக அது வேண்டும் என்று நாம் கூறிவருகின்றோம் என்பதைப்; பற்றி நீங்கள் சிந்தித்துள்ளீர்களா?
வடக்கு கிழக்கு கி.மு 300ம் ஆண்டுக்கு முன் பிரிந்து தமிழ் மொழி பேசிவரும் பிராந்தியங்கள். அவை தொடர்ந்தும் தமிழ்ப் பேசும் பிராந்தியங்களாக இருந்து வர வேண்டும் என்றால் அவை இணைய வேண்டும். தமிழ்ப் பேசும் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும். தமிழ்ப் பேசும் முஸ்லீம்களுடன் சேர்ந்து நாம் இனியும் வருங்காலத்தில் தமிழ் பேசி வர இடமளிக்க வேண்டும். ஆனால் சிங்கள அரசியல்த் தலைவர்களின் சிந்தனை வேறாக இருக்கின்றது.
இது ஒரு சிங்கள பௌத்த நாடு. தமிழர்களும் முஸ்லீம்களும் வந்தேறு குடிகள். ஆகவே திரும்பவும் இந் நாடு சிங்கள பௌத்த நாடாக மாற நாம் ஆவன செய்ய வேண்டும்.
சிங்களவர்களுக்கு உலகில் வேறு எந்த நாடும் இல்லை. எமக்கு இருக்கும் நாட்டை நாங்கள் எங்களுக்கென்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அவர்களின் இந்தச் சிந்தனையில் இருக்கும் தவறைத்தான் நான் அண்மைக் காலமாக வெளிப்படுத்தி வருகின்றேன். அதாவது வடக்கு கிழக்கு புத்தர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழ்ப்பேசும் பிரதேசங்களாக இருந்து வந்துள்ளன. இன்றும் வடக்கு கிழக்கு பெரும்பான்மை தமிழ்ப்பேசும் மக்களின் வாழ்விடங்களே.
தமிழ்ப் பிரதேசங்களுக்கு சிங்களப் பெயர்கள் முன்பிருந்ததில்லை. மிக அண்மையில் புராதனத் தமிழ்ப் பெயர்கள் சிங்கள மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டு அவை ஆதி காலந் தொடக்கம் இருந்து வருவதாகக் கூறுவது அண்டப்புழுகாகும். உதாரணத்திற்கு மணலாற்றைக் குறிப்பிட்டுள்ளேன். ஆங்கிலேயர் காலத்திலும் 1948 இன் பின்னரும் மணலாறு என்றே அந்த இடம் அழைக்கப்பட்டு வந்தது. அறிக்கைகள் பலவற்றிலும் அவ்வாறே காணப்படுகின்றது. சுமார் நாற்பது அல்லது ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்து தான் சடுதியாக சிங்களப் பெயரான வெலிஓயா காணப்படுகின்றது.
முன்னர் வெலிஓயா என்றிருந்ததைத்தான் தமிழர்கள் மணலாறு என்று இப்பொழுது அழைக்கின்றார்கள் என்கிறார்கள் சிங்களவர்கள். அவர்கள் கூறுவது பொய்யா, புழுகா, புரட்டா என்று நீங்கள்தான் கூற வேண்டும்.
எனவேதான் எமது இடங்களின் பெயர்கள் பறிபோய், எமது மொழி பறிபோய், எமது மதங்கள் பறிபோய், தமிழர்கள் முன்னர் வாழ்ந்த இடங்கள் இவைதான் என்று சரித்திரம் எதிர்காலத்தில் கூறாதிருக்கத்தான் வடகிழக்கு இணைக்கப்பட்டு தமிழ்ப்பேசும் இடங்களாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இந்தத் தேவை எமது வருங்காலங்கருதி எமக்குண்டு. அதைச் சிங்கள அரசியல் வாதிகள் எதிர்க்கின்றார்கள் என்ற காரணத்தால் வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா என்று கேட்பது உங்கள் கையாலாகாத தனத்தை வெளிக்காட்டுகின்றது.
ஆகவே தமிழத்தேசியம், வடகிழக்கு இணைப்பு, தமிழர் தாயகம் ஆகியன எமக்கிருக்கும் உரிமைகள் என்பதை நீங்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டும். தமிழ் மக்கள் கூட்டாகச் சிந்தித்து தம்மை ஒரு தனி மக்கட் கூட்டத்தினர் என்று கருதி வந்தமையே தமிழ்த்தேசியத்தின் ஆணிவேர். வடகிழக்கு இணைப்பை ஏற்கனவே 1987ல் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் அது உள்ளடக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது மறுக்கமுடியாத ஒரு உண்மை. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதும் குறித்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் பிதற்ற எதுவும் இல்லை. அறிவின்றி குழறுதலே பிதற்றுதல். நாங்கள் அறிவோடு, விழிப்போடு, எதிர்காலச் சிந்தனையோடு எமது வருங்காலச் சந்ததியினரின் நினைப்போடு கூறுவது பிதற்றுதல் ஆகாது. உங்கள் கேள்விதான் அவ்வாறு தொனிக்கின்றது. இவை யாவும் உண்மையும் சாத்தியமானவையுமே. தமிழ்த்தேசியம் உண்மை. வடகிழக்கு இணைப்பும் தமிழர் தாயகமும் 1987ம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள். மேற்படி உண்மைகள் இறைமையுள்ள இரு நாடுகளின் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்டு கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எமது உரிமைகள் தரப்பட்டால் சேர்ந்து இந்த நாட்டை முன்னேற்ற எந்தத் தமிழனும் பின்னிற்கமாட்டான். எமது உரிமைகள் கிடைக்காது சேர்ந்தோமானால் இருபது வருடங்களில் வடகிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதிப்பேர் சிங்கள சகோதரர்களாவது உறுதி. இம் முறை வடக்கு மாகாணசபையில் இரண்டு பேர் சிங்கள சகோதரர்கள். எல்லா ஆவணங்களையும் தம் மொழிக்கு மொழி பெயர்த்துத் தர வேண்டும் என்று அவர்கள் விடாப்பிடியாக நின்று தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். அதிகாரம் உள்ளவர்களுடன், ஆட்பலமுள்ளவர்களுடன், ஆயுதபலம் உள்ளவர்களுடன் நாம் சேர்ந்தால் நாம் இருந்த இடந்தெரியாமல் மறைந்து போவது உறுதி. காணி, வியாபாரம், வணிகம், மீன்பிடி, அரசாங்க வேலைவாய்ப்பு, எமது வளங்கள் என்று எல்லாமே எங்கள் கண்களின் முன்னிலையிலேயே பறிபோய்விடுவன. நாம் சேர்ந்திருப்பதால் எம்மால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது போய்விடும். நாம் வலு இழந்தவர்கள் ஆகிவிடுவோம். பலமுள்ளவன் கூறுவதை அவன் எண்ணப்படி செய்வதை விட எமக்கு வேறு வழி இல்லாது போய்விடும்.
ஆகவே உங்கள் கேள்விக்குப் பதில் இதுதான்.
தமிழ்த் தேசியம், வடகிழக்கு இணைப்பு, தமிழர் தாயகம் பற்றி பேசுவது பிதற்றல் அல்ல. எமது உரிமைகளின் உத்வேகக் குரல். அவை சாத்தியமென்று உங்களைப் போன்றவர்கள் நினைக்கத் தொடங்கினால் அது கட்டாயம் சாத்தியமாகும்.
அரசாங்கங்களுடன் சேர்வதைப் பற்றி எமது உரிமைகள் கிடைத்த பின்னரே சிந்திக்க வேண்டும். இல்லையென்றால் நாம் ஏமாற்றப்படுவோம். திரு.சம்பந்தன் அவர்கள் 2016 தொடக்கம் சிங்கள அரசியல்வாதிகள் அரசியல்த் தீர்வை தமிழர்களுக்குத் தருவார்கள் என்று உண்மையாகவே நம்பினார். ஒவ்வொரு வருடமும் அவரின் நம்பிக்கையை வெளிக்கூறினார். ஆனால் நடந்தது என்ன? பறிக்க வேண்டியவற்றைப் பெற பலமுள்ளவனுடன் சேர்ந்தால் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்பதுதான் யதார்த்தம்.
நாம் பாடுவது பழைய பல்லவியாக இருந்தாலும் அவை உண்மையின்பாற்பட்ட பல்லவிகள். பகட்டுக்காகப் பாவிக்கப்படும் பல்லவிகள் அல்ல. வாக்குக்காக வாய் பாடும் வங்குரோத்துப் பல்லவிகள் அல்ல. வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகாது விட்டால் முதலில் கிழக்குப் பறிபோகும். பின்னர் வடக்குப் பறிபோகும். வரும் 30, 40 வருடங்களில் வரலாறானது வடக்கு கிழக்கு என்பவை ஒரு காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் என்று அடையாளம் காட்டுவன – இன்று பறங்கியர் பற்றி நாம் குறிப்பிடுவது போல்- என்றுள்ளது.