உலகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, April 16, 2020

உலகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பு!



கொரோனா வைரஸ் காரணமாக உலகமே நிலைகுலைந்து போயுள்ள நிலையில் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

மேலும் 30 ஆயிரம் பேர் புதிதாக தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறரை இலட்சமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா நோயால் நேற்று 84 ஆயிரத்து 515 பேர் நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை மொத்தமாக 20 இலட்சத்து 83 ஆயிரத்து 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மொத்தமாக நேற்று மட்டும் 7 ஆயிரத்து 960 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 616 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, 51 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் இதுவரை 5 இலட்சத்து 10 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றின் மையப்புள்ளியாக மாறிப்போன அமெரிக்காவில் ஒரேநாளில் 2 ஆயிரத்து 482 பேர் மரணித்ததைத் தொடர்ந்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 529ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், நேற்று மட்டும் 30 ஆயிரத்து 206 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 44 ஆயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 489 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதுடன் இதுவரை 48 ஆயிரத்து 708 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்க மாநிலங்களில் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ள நியூயோர்க்கில் நேற்று மட்டும் 752 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு 11 ஆயிரத்து 525 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நியூயோர்க்கில் மட்டும் 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைவிட நியூஜெர்ஸியில் நேற்று 351 பேர் மரணித்துள்ளதோடு, அங்கு மொத்தமாக 71 ஆயிரத்து 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஐரோப்பிய நாடுகளை நிலைகுலைய வைத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மட்டும் 4 ஆயிரத்து 601 பேர் மரணித்துள்ளதுடன் அந்நாடுகளில் மொத்த உயிரிழப்பு 88 ஆயிரத்து 319 ஆக அதிகரித்துள்ளது.

இதனைவிட, நேற்று 33 ஆயிரத்து 469 பேர் புதிய நோயாளர்களாக அந்நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 9 இலட்சத்து 70 ஆயிரத்து 757 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரான்ஸில் கொரோனா வைரஸ் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளதுடன் அங்கு நேற்று மட்டும் ஆயிரத்து 438 பேர் மரணித்துள்ளனர்.

அத்துடன், அங்கு 4 ஆயிரத்து 560 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 863 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், அங்கு மொத்த உயிரிழப்பு 17 ஆயிரத்து 167 பேராக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 30 ஆயிரத்து 955 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ள இத்தாலியில் கொரோனா தொற்று சற்றுக் குறைந்த நிலை காணப்படுகின்ற போதிலும் நேற்றும் 578 பேர் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளது.

முன்னரைவிட இப்போது உயிரிழப்புக்கள் சற்றுக் குறைவான நிலையில் இதுவரை 21 ஆயிரத்து 645 பேரின் மரணங்கள் பதிவாகி உலக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இத்தாலி உள்ளது. அங்கு இதுவரை ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 38 ஆயிரத்து 92 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனைவிட வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஸ்பெயினில் நேற்று மட்டும் 557 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 18 ஆயிரத்து 812 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 659 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குணமடைந்து வெளியேறுவோரும் கூடுதலாகக் காணப்படுகின்றனர். அங்கு இதுவரை 70 ஆயிரத்து 853 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனைவிட, பிரித்தானியாவில் தீவிரமாகப் பரவி இப்போது பெரும் மனித அழிவை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. அங்கு நேற்று மட்டும் 761 பேர் மரணித்துள்ளதடன் மொத்த உயிரிழப்பு 12 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று மட்டும் 4 ஆயிரத்து 603 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 98 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஜேர்மனியில் நேற்று மட்டும் 309 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 3 ஆயிரத்து 804ஆக அதிகரித்துள்ளது.

மேலும், அங்கு மொத்தமாக ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 753 பேர் இதுவரை வைரஸ் தொற்றுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 72 ஆயிரத்து 600 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனைவிட மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நேற்று மட்டும் 283 பேர் மரணித்துள்ள நிலையில் அங்கு மொத்தமாக 4 ஆயிரத்து 440 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

மேலும், நெதர்லாந்தில் நேற்று மட்டும் 189 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு 3 ஆயிரத்து 134 பேராக உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

அத்துடன், சுவீடனிலும் நேற்று அதிகபட்ச உயிரிழப்பாக 170 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுவிற்சர்லாந்தில் 65 பேரும், போர்த்துக்கலில் 32 பேரும் அயர்லாந்தில் 38 பேரும் ரஷ்யாவில் 28 பேரும் நேற்று மரணித்துள்ளனர்.

இதனைவிட, அமெரிக்க நாடான கனடாவில் நேற்று மட்டும் 107 பேர் மரணித்துள்ள நிலையில் அங்கு மொத்த உயிரிழப்பு ஆயிரத்தைக் கடந்து ஆயிரத்துப் 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கனடாவில் இதுவரை 28 ஆயிரத்து 379 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 8 ஆயிரத்து 979 பேர் குணமடைந்துள்ளனர். இதனைவிட மெக்ஸிகோவில் நேற்று மட்டும் 74 பேர் மரணித்துள்ளனர்.

அத்துடன், பிரேஸிலில் நேற்று மட்டும் 225 பேரின் மரணங்கள் பதிவாகிய நிலையில் அங்கு மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 757ஆக அதிகரித்துள்ளதுடன் பேருவில் நேற்று 24 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, ஆசிய நாடுகளில் நேற்று 344 பேர் மரணித்துள்ளதுடன் அந்நாடுகளில் மொத்த உயிரிழப்பு 12 ஆயிரத்து 68 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேற்று 11ஆயிரத்து 846 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை ஆசியாவில் 3 இலட்சத்து 33 ஆயிரத்து 197 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து 69 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆசியாவில் அதிகபட்சமாக நேற்று துருக்கியில் 115 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு மொத்தமாக 69 ஆயிரத்து 392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட ஈரானில் நேற்று 94 பேர் மரணித்துள்ள நிலையில் அங்கு மொத்த மரணங்கள் 4 ஆயிரத்து 777ஆக அதிகரித்துள்ளது. மேலும், அந்நாட்டில் 76 ஆயிரத்து 389 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 49 ஆயிரத்து 933 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இந்தியாவில் நேற்று மட்டும் 29 பேர் மரணித்துள்ளதுடன் ஜப்பானில் அதிகபட்சமாக 32 பேரும், பாகிஸ்தானில் 15 பேரும் மரணித்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா பரவல் ஆரம்பித்த சீனாவில் நேற்று 46 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளது.