இலங்கையில் ஒரே நாளில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று - அண்மைய தகவல்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 1, 2020

இலங்கையில் ஒரே நாளில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று - அண்மைய தகவல்கள்

இலங்கையில் கொரொனா தொற்று காரணமாக இதுவரை 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.

இன்றைய தினம் புதிதாக 20 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளனர்.

114 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 173 பேர் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொழும்பு பங்கு சந்தை மூடப்படுகின்றது
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்படும் வரை கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கைகளை ஆரம்பிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிணைமுறிகள் மற்றும் பங்கு பரிவர்த்தனை சபையின் தீர்மானத்திற்கு அமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கொவிட் 19 வைரஸ் பரவுவதை அடுத்து, அரசாங்கத்தினால் முன்னெடுத்துள்ள தீர்மானத்திற்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தின நிகழ்வுகள் ரத்து
இலங்கையில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு, எதிர்வரும் ஈஸ்டர் தின ஆராதனைகளை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் இல்லம் அறிவித்துள்ளது.