நாட்டில் "கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைவதாக சுகாதார ஆய்வுகள் கூறுகின்ற நிலையில் அடுத்த வாரமளவில் நோய் பரவல் குறைவடைய வாய்ப்புகள் உள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைகின்றது என்ற காரணத்திற்காக மருத்துவ கண்காணிப்பு வேலைத்திட்டங்களை குறைத்தாலோ அல்லது பலவீனப்படுத்தினாலோ மீண்டும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் சுற்று பரவல் ஆரம்பித்து விடும் எனவும் எச்சரிக்கை விடுக்கின்றது.
நாட்டில் "கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் தன்மை குறித்து தொற்றுநோய் தடுப்பு பிரிவின் சிறப்பு வைத்தியர் சமன் ஹேவகே தெரிவிக்கையில்,
நாட்டில் இன்னமும் தொற்றுநோய் பரவல் உள்ளது. ஆனால் தொற்றுநோய் கண்டறியப்பட்ட நபர்களின் நெருங்கிய நபர்கள் மற்றும் உறவினர்கள் இடையிலேயே இந்த நோய் பரவல் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றுநோய் பரவலானது கண்டறியப்பட்ட முதல் நபர் மற்றும் அவரிடம் இருந்து பரவும் இரண்டாம் கட்டத்தினர், மூன்றாம் கட்டத்தில் பரவ எதுவாக இருக்குமென சந்தேகிக்கப்படும் நபர்கள் ஆகியோர் அனைவரையும் பரிசோதித்து இந்த நோய் பரவலை கட்டுப்படுத்தி வருகின்றோம்.
தொடர்சியாக இவர்களை குறித்த கால எல்லைக்குள் மீண்டும் மீண்டும் பரிசோதிக்கப்பட்டு நோய் தன்மைகளை அறிந்துகொள்ள நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இப்போது வரையில் நாம் முன்னெடுத்து வருகின்ற முயற்சிகள் முழுமையாக வெற்றியளித்துள்ளது.
அதேபோல் நாட்டில் இப்போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் வீதம் குறைவடைந்துள்ளது. கொரோனா தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவே சுகாதார ஆய்வுகள் வெளிப்படுதுகின்றது.
ஆனால் எண்ணிக்கை குறைகின்றது என்ற காரணத்திற்காக எமது கண்காணிப்பு வேலைத்திட்டங்களை குறைத்தாலோ அல்லது பலவீனப்படுத்தினாலோ மீண்டும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் சுற்று பரவல் ஆரம்பித்து விடும்.
அதற்கான இடம் வழங்கப்படக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி நாம் கடுமையான சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இப்போதுள்ள ஆரோக்கியமான மட்டத்தை மேலும் தக்கவைதுகொண்டு மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் இப்போது நாம் முன்னெடுக்கும் சுகாதார வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் அடையாளங்களை வெளிப்படுத்தும் நபர்கள் உள்ளனரா என்பது குறித்த ஆய்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம். முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள சகலரதும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. நோய் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை கண்டறிய சகல தரப்பில் இருந்தும் பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும். இப்போதுள்ள நிலைமையில் நோய்பரவல் குறைவடைந்துள்ளதா என்பதை அடுத்த வாரமளவில் அறிந்துகொள்ள முடியும்.
அடுத்த வாரமளவில் நோயாளர்களின் எண்ணிக்கை குடைவடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.அவ்வாறான மாற்றங்கள் தென்பட்டால் படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்கையை நெருக்கடியில்லாது வாழ இடமளிக்க முடியும். ஆனால் நோய் தொற்று குறைவடைந்துள்ளது என தெரிந்த அடுத்த நாளே மக்களை வீதியில் நடமாட அனுமதிக்க முடியாது. மக்களை இன்னும் சிறிது காலம் கட்டுப்படுத்தி இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள சட்ட முறைமைகளை மேலும் நடைமுறைப்படுத்தியே அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்