பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான மிண்டானோவில் இராணுவம் மற்றும் ஆயுதக் குழுவுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 11 பிலிப்பைன்ஸ் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
சுலு மாகாணத்தின் பாடிகுல் என்ற இடத்திலேயே ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதக் குழுவுடன் கூட்டணி வைத்த 40 பேர் கொண்ட அபு சயாஃப் என்ற குழுவுடன் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பிராந்தியத்தின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சிரிலிட்டோ சோபெஜானா உறுதிப்படுத்தினார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமான இந்த தாக்குதலானது சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் உதவி வழங்கும் என்றும் அந்நாட்டு இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் இந்த தாக்குதல் காரணமாக அபு சயாஃப் அமைப்பினர் பின் வாங்கியுள்ளனர்.
அமெரிக்காவும் பிலிப்பைன்ஸும் ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள அபு சயாஃப் மீது இராணுவத்தினர் பல ஆண்டுகளாக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.