பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அணியினர் யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் தொலைப்பேசி சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய மக்கள் சக்தி, இந்தப் பொதுத் தேர்தலில் கூட்டணி என்ற ரீதியில் களமிறங்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கு தெரிவித்துவிட்டோம்.
இதுதொடர்பாக வேட்புமனுக்களையும் நாம் தயாரித்து விட்டோம். இதுதொடர்பாக அனைத்துத் தரப்பினருக்கும் நாம் அறிவித்துள்ளோம்.
நாம் இந்தப் பொதுத் தேர்தலில் தொலைப்பேசிச் சின்னத்தில் களமிறங்க தீர்மானித்தும், சில பேச்சுவார்த்தைகளின் பின்னர் அதனை உத்தியோகபூர்வமாக அறிவித்து, பிரசாரத்தை ஆரம்பிக்கலாம் என்றுதான் கருதியிருந்தோம்.
கட்சியின் ஐக்கியத்திற்காகவே நாம் இவ்வாறான தீர்மானத்தை எடுத்திருந்தோம். இந்த நிலையில், தனித்தனியாக தேர்தலில் எந்தவொரு தரப்பேனும் களமிறங்குமாக இருந்தால், அது கட்சியை பலவீனப்படுத்தி பிளவடையச் செய்யும் செயற்பாடாகவே கருதப்படுகிறது.
இந்தப் பொதுத் தேர்தலில் எவ்வாறான தடைகள் வந்தாலும், நாம் ஐக்கிய மக்கள் சக்தியில்தான் களமிறங்குவோம். இதனை நாம் தீர்மானித்துவிட்டோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.