இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனக்கு எதிரான பிடியாணையினை செல்லுபடி அற்றதாக்குமாறு கோரியே அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட 10 சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 6ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால், கோட்டை நீதவான் நீதிமன்றில் கடந்த புதனன்று புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும் கடந்த மூன்று நாட்களாக அவரை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.