கொரோனா வைரஸ் – தனியார் துறையினருக்கும் நாளை விடுமுறை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 14, 2020

கொரோனா வைரஸ் – தனியார் துறையினருக்கும் நாளை விடுமுறை

கொரோனா வைரஸ் நாட்டில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை கருத்திற்கொண்டு தனியார் துறையினருக்கும் நாளை (திங்கட்கிழமை) அரச விடுமுறை தினமாக அமுல்ப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் இலங்கையையிலும் கோரத்தாண்டவமாடுகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சந்தேகத்தில் இதுவரையில் 103 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் ஆயிரத்து 600 பேர் வரை தற்போது கொரோனா தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் வைரஸ் தொற்று மேலும் பரவாதிருப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தேசிய மிருககாட்சிசாலைகள், உயிரியல் பூங்காக்கள், வனப்பாதுகாப்பு திணைக்களம் ஆகியனவற்றை எதிர்வரும் 2 வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள 11 நாடுகளிலுள்ள இலங்கை தூதகத்தின் சேவைகள் தற்காலிமாக மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் கூடும் நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இரத்து செய்யப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டின் சகல பயிற்சி பட்டறைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மக்களை ஒன்றிணைத்து இந்த வைரஸ் தாக்கத்தினை நாட்டில் இல்லாது ஒழிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, அங்கு தங்கியிருந்து பயிற்சி பெறும் அனைவரையும் தங்களது இல்லங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வரையில் இலங்கையில் இருந்து, வெளிநாடுகளுக்கு தொழில்புரிவதற்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.