கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொண்ட நபர்கள் குறித்து தொடர்ந்து சோதனை முன்னெடுப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 14, 2020

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொண்ட நபர்கள் குறித்து தொடர்ந்து சோதனை முன்னெடுப்பு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொண்ட நபர்கள் தொடர்பாக தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் ஊடாக சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவதன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது. அதாவது இத்தாலியில் இருந்து வருகை தந்த நிலையில் கந்தக்காடு கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஒருவர் மற்றும் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரும் நேற்று (சனிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு விசேட வைத்திய குழுக்களின் கண்காணிப்பில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தில் 110 பேருக்கும் அதிகமானோர் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவு உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையிலேயே சுகாதார அமைச்சு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொண்ட நபர்கள் தொடர்பாக சோதனைகளை முன்னெடுத்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதிப்பதற்கோ அல்லது வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக இனங்காணப்பட்டோர் சிகிச்சை பெறுவதற்கோ தனியார் வைத்திசாலைகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

அத்துடன், சிகிச்சைகளுக்காக அரச வைத்தியசாலைகளுக்கு மாத்திரமே செல்ல வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.