கொரோனா குறித்து வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 12, 2020

கொரோனா குறித்து வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சமூக வலைத்தளங்கள், கையடக்கத்தொலைபேசி ஊடாக இலங்கையின் கொரோனா நிலை தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் பகிரப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதால், பொறுப்பு வாய்ந்த துறையினரால் வழங்கப்படும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகின்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் சில ஊகங்களால் உண்மையான விடயங்கள் மறைக்கப்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று முதல் நாளாந்தம் ஊடக அறிக்கையை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நோயாளியின் மகனுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல்களின் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நோயாளியின் குடும்பத்தினரால் பாரிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும் அதனால் அவர்கள் வீட்டிற்குள்ளேயே கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

குடும்பத்தினருக்கு தொற்றுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு ஐனுர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருபவரின் மகன், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி பயில்வதால் இன்று காலை தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர்கள் பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.