மட்டக்களப்பு பல்கலைகழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் இருந்து எவ்வித கொடுப்பனவும் அறிவிடப்பட மாட்டாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் நாளாந்தம் வழங்கப்படும் உணவிற்காக பணம் செலுத்த வேண்டியுள்ளமை தொடர்பாக அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.
அவர்களுக்கு தேவையான உணவை பெற்றுக்கொள்வதற்கு பணம் செலுத்த வேண்டியுள்ளதுடன், அதற்காக 14 நாட்களுக்கு மூன்று வேளை உணவை பெற்றுக்கொள்ள 7500 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ள மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து அமைதியற்ற விதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையிலேயே, கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் இருந்து எவ்வித கொடுப்பனவும் அறிவிடப்பட மாட்டாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.