வடக்கு கிழக்கு நிலைப்பாடு என்ன?: சஜித்துடன் இணைந்து ஆட்சியமைக்க முடியுமா?- ஜனாதிபதி அறிவிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 5, 2020

வடக்கு கிழக்கு நிலைப்பாடு என்ன?: சஜித்துடன் இணைந்து ஆட்சியமைக்க முடியுமா?- ஜனாதிபதி அறிவிப்பு

சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அரசாங்கத்தினை அமைக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்றவகையில் அவர்களுக்குப் பணியாற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் சில சிக்கல்களே இதற்குப் பிரதான காரணமாக இருக்கின்றது.
19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நாட்டினை ஆட்சி செய்வதில் பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன. எனவேதான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை வழங்குமாறு மக்களிடம் ஆணை கோரியுள்ளோம்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் ஏதேனும் செய்யமுடியும் என வாக்களித்த மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். இதற்கு இடையூறு ஏற்படும் போது அதுகுறித்து அவதானம் செலுத்த வேண்டும்.
19ஆவது திருத்தத்தின் கீழ் உள்ள அரச ஆட்சி முறையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைச் சரிசெய்வதற்காகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கோரியுள்ளோம்.
அதேபோன்று, சுயாதீன ஆணைக்குழு என்றால் சுயாதீனமான முறையில் செயற்பட வேண்டும். அதில் எவ்வித அரசியல் தலையீடுகளோ அல்லது அரசியலோ இருக்கக் கூடாது.
உதாரணமாக கடந்த காலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஒருவர் தனக்கு விருப்பமான முறையில் செயற்பட்டார். அத்துடன், கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. ஏன் அது உருவாக்கப்பட்டது எனத் தெரியவில்லை.
பொலிஸ் அதிகாரிகள் சுயாதீனமான முறையில் செயற்படும் அதிகாரிகள் இல்லையா எனக் கேட்க விரும்புகின்றேன். உதாரணத்திற்கு 38 வருடங்களாக நாட்டில் பணியாற்றியுள்ள பொலிஸ்மா அதிபரை நம்ப முடியாவிட்டால். எப்படி புதிதாக நியமிக்கப்படும் ஆணைக்குழுவினை நம்ப முடியும்?
அதேபோன்று, தற்போது பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனம் தொடர்பாக அதிகமாகப் பேசப்படுகின்றது. தேர்தலினை இலக்குவைத்து இந்த நியமனங்கள் வழங்கப்படவில்லை.
தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான நியமனங்கள் அனைத்தும் பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் வழங்கப்படும். தகுதிவாய்ந்தவர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அரசியல் நோக்கங்களோ அல்லது எவ்விதமான அரசியல் தலையீடுகளோ இல்லை என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கின்றேன்.
தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்கும் செயற்பாட்டினை இடைநிறுத்துமாறு அறிவித்துள்ளார். ஏன் அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் ஊடாக தெளிவுபடுத்தவுள்ளோம். பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்கும்போது அதற்குத் தடைவிதிக்க முடியாது.
பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை இடைநிறுத்துவதனால் எவ்வித பயன்களும் இல்லை. எனவே இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெளிவுபடுத்தப்படும்.
இதேவேளை, வடக்கு கிழக்கிலுள்ள மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதன் ஊடாகவே அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
வடக்கு, கிழக்கு, தென் பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு சம அளவிலேயே வளப்பங்கீடுகள் வழங்கப்பட வேண்டும். பிரச்சினை என்பது அனைவருக்கும் உள்ளதுதான்.
வடக்கு, கிழக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் ஜெனீவா விடயம் பற்றி அதிகம் பேசி வருகின்றனர்.
பொருளாதாரப் பிரச்சினையே இங்கு அரசியல் பிரச்சினையாக மாற்றம் பெற்றுள்ளது. அதேபோன்று காணாமல் போனவர்கள் பற்றித் தெளிவாக ஆராயவேண்டியுள்ளது. இதுகுறித்து தேடிப்பார்த்ததன் பின்னரே பேச வேண்டும். இராணுவத்திலும் காணாமல் போனவர்கள் உள்ளனர். யுத்தத்தின் அடிப்படையிலேயே காணாமல் போனவர்கள் பற்றிப் பேசப்படுகின்றது.
யுத்த பூமி என்றால் அங்கு காணாமல் போனவர்கள் இருப்பார்கள். இதுகுறித்துத் தெரியாதவர்களே அதிகம் பேசுகின்றனர். தெரிந்திருந்தாலும் அவர்கள் தங்களது தேவைகளுக்காக காணாமல் போனவர்கள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
காணாமல் போனவர்கள் அனைத்துத் தரப்பிலும் உள்ளார்கள். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் யுத்தத்தின்போது காணாமல் போயுள்ளனர்.
யுத்தத்தின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களின் சடலங்களை அடையாளம் காணமுடியாதவிடத்து, அவர்களின் சடலங்களை உறவினர்களிடம் கையளிக்க முடியாது.
எனவே இவ்வாறு உயிரிழந்தவர்கள் அனைவரும் அவர்களின் உறவினர்களைப் பொறுத்தவரையில் காணாமல் போனவர்களே. கடந்த காலத்தினைப் பற்றிப் பேசுவதனால் எவ்விதப் பயனும் இல்லை. எதிர்காலம் பற்றியே இனிப் பேசவேண்டும்.
காணாமல் போனவர்கள் கனடாவிலும் இருக்கலாம். ஆகவே இதுகுறித்து நன்கு ஆராய்ந்ததன் பின்னரே தீர்மானம் ஒன்றினை எடுக்கமுடியும். அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என்பதே எனது நிலைப்பாடு.
இதேவேளை, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை முன்னிட்டு நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் நிச்சயம் கலந்துகொள்வேன்.
அதேபோன்று, மனிதர்களை விடவும் கொள்கைகளினையே பார்க்க வேண்டும். கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளுக்கு மக்கள் அனுமதி வழங்கவில்லை.
வடக்கில் உள்ள வாக்குகள் கொள்கை ரீதியானவை இல்லை. அவை இனவாதம் கொண்டவை. அரசியல் நோக்கம் கொண்டவை. எனவே அங்கு சஜித்திற்கு வழங்கப்பட்ட வாக்குகளைத் தவிர்த்துப் பார்த்தால், கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளுக்கு மக்கள் அனுமதி வழங்கவில்லை என்பது புலனாகின்றது.
கொள்கைகள் அற்ற, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து அக்கறை செலுத்தாத கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த சஜித்துடன் இணைந்து பயணிக்க முடியாது. கொள்கைகள் எதுவும் இல்லாத அரசாங்கத்தினால் எவ்விதப் பயன்களும் இல்லை என்பதே எனது உறுதியான நிலைப்பாடு.
தற்போது நாட்டில் நிர்வாக சேவையில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறித்து பலரும் பேசுகின்றனர். நான் நியமித்துள்ள அதிகாரிகளை விடவும் கடந்த அரசாங்கத்தில் அதிகளவானர்கள் நியமிக்கப்பட்டனர்.
பல்கலைக்கழக நிர்வாகங்களில் கூட கடந்த அரசாங்கத்தில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதுகுறித்து எவரும் பேசவில்லை. குறிப்பாக ஊடகங்களோ, வெளிநாட்டினரோ, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ இதுபற்றிப் பேசவில்லை.
எனினும் இவர்கள் அனைவரும் தற்போது என்னால் வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் பற்றிப் பேசுகின்றனர். இவையனைத்தும் அரசியலை நோக்காகக் கொண்டவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.