மன்னார் சதோச மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணம் நீதிமன்றில் கையளிக்கப்பட்டதையடுத்து, எதிர்வரும் 10ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் சதோச மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணம் இன்று (வியாழக்கிழமை) காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக மன்னார் நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
கடந்த மாதம் 25ஆம் திகதி மன்னார் மனித புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த வழக்கு தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணத்தை இம்மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள் முன்வைக்க நீதவான் உத்தரவிட்டார். இந்நிலையிலேயே இன்றைய தினம் குறித்த எழுத்து மூல சமர்பணம் நீதிமன்றில் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த எழுத்து மூல சமர்ப்பணத்தின் பின்னர் எதிர்வரும் 10ஆம் திகதி மன்னார் சதோச மனித புதை குழி வழக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக சட்டத்தரணிகள் வாதிட முடியுமா இல்லையா என்பது தொடர்பான தீர்ப்பு வழங்கப்படுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.