அநுராதபுரத்தில் கைதிகள் மேற்கொண்ட கலவரத்தை அடக்க முடியாமல் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் இருவர் கொரோணா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாமென கருதப்பட்டு, நேற்று அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து கைதிகளிடையே பதற்றம் ஏற்பட்டது.
தமக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாமென்றும், தம்மை வேறிடத்திற்கு மாற்றுமாறும் குறிப்பிட்டு கைதிகள் போராட்டம் நடத்தினர். போராட்டம் தீவிரமடைந்து, சிறைக்கூண்டுகளை உடைத்துக் கொண்டு வெளியேறி கூரைகளில் நின்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, சிறைக்காவலர்கள் அங்கு தங்கி நிற்க முடியாமல் வெளியேறியதாகவும், இதைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதன்போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, இராணுவத்தினர் மற்றும் அரசியல் கைதிகளிற்கிடையில் பேச்சு நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, சம்பவத்தை உறுதிசெய்தார். தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தன்னை தொடர்பு கொண்டதாகவும், உடனடியாக அரசுடனும், பாதுகாப்பு தரப்புடனும் தான் பேசியதாகவும், அங்குள்ள 11 தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விடயத்தில் தொடர்ந்தும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.