புத்தளம் தள வைத்தியசாலைக்கு பொதுமக்கள் நோயாளர்களை பார்வையிட வரும் போது சிறுவர்களையும், முதியவர்களையும் அவசியமின்றி அழைத்து வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், புத்தளம் வைத்தியசாலை நிர்வாகத்தால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட வருவோர் 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களையும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களையும் அவசியமின்றி அழைத்து வர வேண்டாம் என கேட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புத்தளத்தில் உள்ள காசிமிய்யா அரபுக் கல்லூரி, இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, மன்பாவுஸ் சாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரி, முஹாஜிரீன் அரபுக் கல்லூரி உள்ளிட்ட மதரஸா மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.