நீர்கொழும்பு – பெரியமுல்லை பகுதியிலுள்ள உணவகமொன்றினுள் அத்துமீறி நுழைந்த குழுவொன்று அதன் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் மீது நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த உணவகத்திற்கு நேற்று (திங்கட்கிழமை) இரவு 9.30 மணியளவில் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் அங்கு மது அருந்த முற்பட்டபோது, அதன் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இரு தரப்புக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது அத்துமீறி நுழைந்த குழுவினர் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் மீது ஆயுதங்களினால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்த நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் பணியாளர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கெக்கிராவ – கனெவல்பொல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதோடு, ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.