கொரோனா தொற்றுடன் சுவிஸ் நாட்டில் இருந்து அரியாலை தேவாலயத்திற்கு வந்திருந்த மத போதகரை பாதுகாத்தது யாழ்ப்பாணம் பொலிசாரே என குற்றம் சாட்டியுள்ள வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் இந்த சம்பவத்தின் பின்னணியில் பல விடயங்கள் உள்ளதாகவும் அவற்றை விசாரணைகளின் பின்னர் வெளிப்படுத்தப்படுத்துவேன் என்று குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் ஏற்பட்டவுடன் மத ரீதியாக மக்களை அதிகமாக கூட்டி கூட்டங்கள் பிரார்த்தனைகள் நடத்த வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது. எனினும் அந்த கட்டளையை மீறி யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் அதிகளவான மக்களை கூட்டி பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த மத கூட்டத்திற்கு சுவிஸ் நாட்டில் இருந்து மத போதகர் ஒருவர் வந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்துள்ளது. நாட்டில் மத கூட்டத்திற்கு அரசு தடை போட்ட போதிலும் இங்கு நடைபெற்றமை மற்றும் மத போதகரை பாதுகாத்தமை போன்றவற்றில் முக்கிய காரணியாக யாழ்ப்பாணம் பொலிசார் செயற்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் பல சுவாரசிய தகவல்கள் வெளியாகும். ஆகவே தற்பொது ஏற்பட்டுள்ள கொரோனோ தொற்று தாக்கம் தொடர்பில் பொது மக்கள் மிக அவதானமாக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
மேலும் அரியாலை தேவாலயத்திற்கு சென்றவர்களை இனம் கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு மக்களை மாகாண சுகாதார பணிப்பாளர் கேதிஸ்வரன் கோரியுள்ளார். அப்போது தொலைபேசி ஊடாக அவருக்கு கைது எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் எனக்கு தெரியப்படுத்தப்பட்டது.
மேலும் இந்த விடயம் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டு இது தொடர்பிலும் விசாரணை நடைபெறுகின்றது. அவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசாரணைகள் அனைத்தும் முடிந்ததும் அதன் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்றார்இ