தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க ஐ.நா நடவடிக்கை எடுக்கவேண்டும் - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, March 1, 2020

தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க ஐ.நா நடவடிக்கை எடுக்கவேண்டும்

தமிழீழத்தில் சிங்களப் படைகள் நடத்திய இனப்படுகொலைக்கு நீதி கிடைப்பதற்கு ஐ.நா மன்றம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வை.கோபாலசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் மீது போர் தொடுத்து லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த அண்ணனும் தம்பியும் இன்றைக்கு சிறிலங்காவில் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துவிட்டனர்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைகளுக்கு பன்னாட்டு விசாரணைக்கு இடம் தர மாட்டோம், உள்நாட்டு விசாரணையும் கிடையாது என்று இருவரும் கூறி வருகின்றனர்.

ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசு சார்பில் பங்கு ஏற்ற வெளியறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்தனா, ஐ.நா. பேரவை நிறைவேற்றிய தீர்மானங்கள் இருந்து அரசு விலகுவதாகவும், சிறிலங்கா மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகள் மீது, ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைப்போம் என்றும் கூறி இருக்கிறார்.

சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை கடுமையாகக் கண்டித்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்சேல் பேச்சலெட், ஏற்கனவே ஒப்புக்கொண்ட விசாரணையை தவிர்த்துவிட்டு மாற்று முயற்சி செய்யாமை வருத்தம். அளிக்கின்றது சிறிலங்கா அரசு நியமிக்கும் நீதிபதி விசாரணை ஆணைக் குழுவை ஏற்க முடியாது என்று கூறி உள்ளார்.

சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் தொடருவதையும், ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சியின் கொடூரங்கள் மீண்டும் தலைதூக்கி வருவதையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உறுதிப்படுத்தி உள்ளது.

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க பன்னாட்டு நீதி விசாரணை நடத்த, ஐ.நா.மன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். – இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.