இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக வடமாகாணத்தில் ஆளுநர் அவர்களினால் அமைக்கப்பட்ட செயலணியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று 19.03.2020 வியாழக்கிழமை நடந்த அவசர நிர்வாகசபைக் கூட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு யாழ் வணிகர் கழகத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வர்த்தகர்களுக்கும்ரூபவ் பொதுமக்களுக்கும் வழங்க
விரும்புகின்றோம்.
1. அத்தியாவசியத்தேவையான உணவகங்கள், மருந்தகங்கள், பலசரக்கு வியாபார நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களை கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள அவசர நிலையைக் கருத்தில் கொண்டு பிற்பகல் 2.30 மணியுடன் பூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதனைக்
கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு சகல வர்த்தகர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.
2. வர்த்தக நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்காக மட்டும் ஓரிருவர் வந்து பொருட்களைக் கொள்வனவு செய்தல் சிறந்தது. குடும்பத்துடனோ, கூட்டமாகவோ வருவதை முற்றாக தவிர்த்தல் வேண்டும்.
3. வர்த்தக நிலையங்களுக்கு வயது முதிர்ந்தவர்கள், சிறுவர்களை அழைத்து வருவதனை கண்டிப்பாக தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
4. பொருட்கள் கொள்வனவிற்காக வரும் பொதுமக்களை வர்த்தக நிலையங்களில் அதிக நேரம் தாமதப்படுத்துவதை தவிர்ப்பதோடு, பொதுமக்களை அதிகளவில் வர்த்தக நிலையங்களில் கூடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
5. அத்தியாவசியத்தேவையுடையோர் தவிர்ந்த ஏனையோர் வீட்டைவிட்டு வெளியே வருவதைத் தவிர்த்தல் வேண்டும்.
6. உணவகங்களில் உணவுகளை திறந்த வெளியில் பரிமாறுவதை தவிர்ப்பதோடு, தேநீர், நீர் மற்றும் பதார்த்தங்களை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறும் போது One Day Cup ஐ பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
7. வர்த்தக நிலையக் கதவின் கைபிடிகள் உட்பட வர்த்தக நிலையங்களை கிருமியகற்றும் பதார்த்தங்களைப் பயன்படுத்தி அடிக்கடி சுத்தப்படுத்தி அதிஉச்ச சுகாதாரத்தினைப் பேணுவதுடன், கொரோனா வைரஸிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சு வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக
தண்ணீரில் சவர்க்காரமிட்டு கைகளை அடிக்கடி கழுவுதல், இருமல் அல்லது தும்மல் ஏற்படும் போது உங்கள் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டையால் மூடுதல், உடல்நிலை சரியில்லாத நபர்களுடன் பழகுவதை தவிர்த்தல், மக்கள் கூடுதலாக
ஒன்றுகூடும் இடங்களைத் தவிர்த்தல், கைகள் சுத்தமாக இல்லாவிட்டால் கண்கள், மூக்கு, வாய், அல்லது முகத்தை தொடாதிருத்தல், ஒவ்வொரு நபரிடமிருந்தும் முடிந்தவரை ஒரு மீற்றர் தொலைவில் இருந்து உரையாடுதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விற்றமின் சி, நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் உணவுமுறைகளைப் பின்பற்றுதல், ஏதாவது நோய் அறிகுறி இருப்பின்
வைத்தியசாலையை உடன் நாடுதல் போன்ற ஆலோசனைகளை பின்பற்றுமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றோம்.
மேற்குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களை அனைத்து வர்த்தகர்களும், பொதுமக்களும் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ் அனர்த்தத்திலிருந்து விடுபடுவதற்கு ஒவ்வொரு தனிநபரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.