ஹெரோயின் வாங்குவதற்காக உறவினர் வீட்டிலிருந்து சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களைத் திருடியதாகக் கூறப்படும் யுவதியை நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். லுணுவில, சிறிகம்பள பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியே கைது செய்யப்பட்டவரா வார்.
சந்தேக நபரான யுவதி தனது பாட்டியின் வீட்டிலிருந்து இரண்டு பவுண் எடையுடைய தங்கச் சங்கிலி, பென்டன், கைப்பேசி, கைக்கடிகாரம் போன்றவற்றைத் திருடிச் சென்றுள்ளமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் யுவதியைக் கைது செய்துள்ளனர்.
தனக்கும், தனது கணவருக்கும் ஹெரோயின் வாங்குவதற்காக பணத் தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இவ்வாறு திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரான யுவதியினால் திருடப்பட்ட தங்க நகைகள் வென்னப்புவ நகரில் நகைக் கடை ஒன்றில் விற்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. இதனையடுத்து நகைக் கடை உரிமையாளரும், குறித்த யுவதியின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட யுவதியுடன் மற்றைய இருவரையும் மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்த வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்