எனக்கு ஏற்பட்ட நிலைமையே கோட்டாவுக்கும் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, February 3, 2020

எனக்கு ஏற்பட்ட நிலைமையே கோட்டாவுக்கும்

2015ஆம் ஆண்டு தான் ஜனாதிபதியாக வந்தபோது தனக்கு ஏற்பட்ட நிலைமையே தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “எனக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. அது ரகசியம் அல்ல. நான் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடனேயே செயற்பட்டேன். நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என செயற்பட்டேன். இதன்போது எங்களுக்குள் சில முரண்பாடுகள் ஏற்பட்டன.

நான் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக வந்தபோது எனக்கு ஏற்பட்ட நிலைமையே தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஏற்பட்டுள்ளது. அதாவது நான் ஜனாதிபதியாக வந்தபோது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்கே பெரும்பான்பை அதிகமாக இருந்தது. அதாவது மஹிந்த ராஜபக்ஷவிற்கே பலம் அதிகமாக இருந்தது.

ஆனால் அவர் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு வழங்கினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் எனக்கு வழங்கினார். அதன் பின்னர் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றினோம்.

ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே போதை பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் சிகரட் பக்கட்களின் பின்புறத்தில் கென்சர் நோயாளி ஒருவரின் புகைப்படத்தை அச்சிட செய்தேன். அத்தோடு பல திட்டங்களையும் அமுல்படுத்தினேன். இதை செய்ய முடிந்தமைக்கான காரணம் அன்று மஹிந்த ராஷபக்ஷ தரப்பினர் எனக்கு நாடாளுமன்றத்தில் வழங்கிய ஒத்துழைப்பே ஆகும்.

ஆனால் இன்று அவ்வாறான சூழ்நிலை இல்லை. அதனாலேயே மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சி கடந்த ஒக்டோபர் மாதமே தீர்மானித்தது. அதன்பின்னர் ஜனாதிபதியுடனும் பொதுஜன பெரமுனவுடனும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம்.

அதன் பின்னரான கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவும் இருந்தமையாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகூடிய வாக்குகளால் வெற்றிபெற்றார்.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து ஜனாதிபதி நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து அவருடன் இணைந்து செயற்பட வேண்டும்” என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.